தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வியாழன், 16 ஏப்ரல், 2009

காதல் தோல்வி

காதலில் மட்டும் தான் தோல்வியின் வலிகளும் மிக அழகாக இருக்கும்.அந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் உருவான அற்புதக் கவிதைகள் இவைகள்.


காதல் தோல்வி

நீ அழைக்கும் போது
கடவுள் போல வந்துவிடுவேன்
எங்கிருந்தாலும்!

நீ சொல்லும் போது
அடியாள் போல செய்துவிடுவேன்
எந்தவேலையையும்!

நான் நினைத்துக் கொண்டிருந்தேன்
நாம் காதலித்துக் கொண்டிருப்பதாய்!
பிறகு தான் புரிந்தது
நான்மட்டும் காதலித்துக் கொண்டிருப்பது!


நம்பமுடியவில்லை

மாலை வேளையில் தூக்கியெரியும்
நீ சூடிவாடிய மல்லிகையுடன்
என்காதலும் குப்பைக்கு போனதை
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை!

தமிழ்தாயின் நிலை என்ன?

என்ன நண்பர்களே இன்னும் எத்தனை நாட்கள்தான் ராஜேஸ்குமார்,பட்டுக்கோட்டை நாவல்களையே படித்துக் கொண்டிருப்பீர்கள்.குழந்தையாக இருந்துகொண்டே இருக்கலாமா?.எப்போது பெரியவர்களாகப் போகின்றீர்கள்?.என்ன யோசனை?.கட்டூரையை மேலும் தொடரலாமா வேண்டாமா என்றா சந்தேகமே வேண்டாம்.இந்தக் கட்டூரை உங்களின் வாழ்க்கையை மாற்றிப் போடலாம்.தொடருங்கள்.

என்னுடைய கல்லூரி நண்பர்களில் பலருக்கு தமிழ் எழுத தெரியவில்லை.சிலருக்கு தமிழை வாசிக்கவும் தெரியவில்லை.தமிழன் என்ற பின்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலேயனாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.அப்படியானால் தமிழ் நிலை என்ன?பாரதி சொன்னது போல தமிழ் இனி மெல்லச்சாகுமா?.அந்த நிலைக்கு நாம் தமிழை விடலாமா?.மாற்றானின் தாய்க்கு பணிவிடைகள் செய்துகொண்டு நம்தாயை தெருவில் அனாதையாக விட்டுவிடலாமா?கூடாது,கண்டிப்பாக கூடாது.

நாயன்மார்களும்,ஆழ்வார்களும்,சித்தர்களும் வெறும் சமயத்தினை மட்டும் வளத்தார்கள் என்று சொன்னால் அது நம்முடைய அறியாமை.அவர்கள் சமயத்தோடு தமிழையும் வளர்த்தார்கள்.அவர்களை போல தமிழை நாம் நேசிக்க வேண்டும்.இன்று வலைதளங்களில் என்னற்ற பெரும் மனிதர்கள் தங்களின் சிந்தனைகளை பதித்து வருகின்றனர்.இது போற்றதக்கது.வலைகளில் குறிக்கோள் இல்லாமல் சுற்றி திரியும் நண்பராக இருந்தால் உங்களால் முடிந்த அளவிற்கு தமிழை கற்றுக் கொள்ளுங்கள்.

சித்த புருசர்களின் பாடல்கள் சிவநாமத்தை மறைமுகமாகவே உணர்த்துகின்றன.அவர்களின் விருப்பமெல்லாம் தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும் என்பதுதான்.எளிமையான பாடல்களை படித்து புரிந்து கொள்ளுங்கள்.நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை.தமிழை தமிழர்களே புறக்கனிக்க காரணம் தமிழ் மொழியால் வேலை கிடைக்காதுதான் என்கின்றனர் என் நண்பர்கள்.வெறும் தமிழன் என்று மார்தட்டிக்கொண்டால் மட்டும் போதுமா?தமிழ் பேசவும்,எழுதவும் தெரியாதவன் தமிழாக பிறந்து என்ன பயன்?ஒரு முறை காந்தியடிகள் திருக்குறளின் பெருமைமிக்க குறள்களின் பொருளை அறிந்து கொள்ள தான் தமிழனாக பிறக்கவில்லை என வருத்தப்பட்டாராம்.தமிழனாக பிறந்த நாம் திருக்குறளை படிக்க விருப்பம் கொள்கிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை.

தமிழ் மொழி கற்றால் வேலை கிடைக்கும் என்ற நிலை உண்டானால்தான்.தமிழை அழிவுப்பாதையிலிருந்து மீட்க முடியும் இல்லையென்றான்றால்....எப்படி சொல்ல...தமிழ் இனி மெல்ல சாகுமென....

வாருங்கள் கை கொடுங்கள் தமிழ் வளர்ப்போம்,தமிழனென பெருமை கொள்வோம்.

பிகு-கணிப்பொறி சம்மந்தப்பட்ட செய்திகளை தமிழில் பதிக்கலாம் என நினைக்கிறேன்.ஆனால் எண்ணங்களை செயல்படுத்த சற்று காலம் காத்திருக்க வேண்டும்.

திருவள்ளுவர் ஞானம்

காப்பு

அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி! 1


கட்டளைக் கலித்துறை

அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும்
நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் தேயிருந்தேன்
என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக் காண்கிலரே. 1

அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புலகத் தார்வசிய மாய்க்கைப் பிடித்தேபிரிந்து
கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே! 2


தரவு கொச்சகம்

அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குக் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன்
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3

வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே! 4


கட்டளைக் கலித்துறை

வீடானமூலச் சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து
நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாதழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன
காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே! 5

எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால்
கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே! 6

எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தானறியாதெனத் தந்தைவிதி
உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண்
டந்நா ளனுப்படி கண்டுபிருந் தறியாதவரே ? 7

யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர்
தேனிக்குள் இன்பஞ்சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே. 8


நேரிசை வெண்பா

இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல்
அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9

ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால் - ஞானமது
கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்தரச முண். 10

சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்ன எய்துமாறு - சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண். 11

வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை
னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
பாலுமது நெய்யெனவும் பார். 12

முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13

காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண். 14

கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு
வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன். 15

என்றும்இந் துப்பாகும் எண்சாணு டலிருக்கக்
கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
வீரியமா யானுணரு மெய். 16

உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
சொற்பாயும் வாசியில் தேகம். 17

அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போல்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் கார்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி. 18

எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி போசைவிதி யுன். 19


(முடிந்தது)

இராமதேவர் – பூஜாவிதி

இராமதேவர் சித்தர் பெருமானின் இந்த பத்து பாடல்களும் பெதுவாக பூஜாவிதி என அழைக்கப்படுகின்றன.சிலர் இராமதேவரை யாகோபு எனவும் வேறுபெயரிட்டு கூறுகின்றனர்.எளிமையான தமிழ் மொழியில் அனைவருக்கும் பயண்படும் படி இவர் எழுதியுள்ள பாடல்கள் இதோ....


ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1


போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே. 2


முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
தீக்கோணத் திக்குதிசை யிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே. 3


சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதி
சீரியவை யுங்கிலியும் சவ்வு மாகி
முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி
முற்றிடுமே யெதிரியென்ற பேய்கட் குந்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு
விரிவான முகக்கருவு மூன்று கேளு
சத்தான அதன்கருவும் சிலையில் வைத்துச்
சதுரான விதிவிவர மறியக் கேளே. 4


கேளப்பா பலிகொடுத்துப் பூசை செய்து
கிருபையுள்ள வுருவேற்றித் திட்ட மாக
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்
வளமாகப் புதைத்துவிடு நடுச் சாமத்தில்
ஆளப்பா அடியற்று மரண மாகி
ஆண்டிருந்த தவசுநிலை தான்கு லைந்து
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி
கதைதெரியச் சொல்லுகிறேனின்னம் பாரே. 5


இன்னமின்னங் கண்முன்சோ தனையு மாகும்
ஈடேற வேணுமென்றா லிதனிற் சூட்சம்
அன்னமின்னா அகிற்கட்டை தேவ தாரம்
அறிவுடைய முளைச்சீவிச் சிங்கை யோதி
வன்னமின்னார் பேர்சொல்லி நசியென் றேதான்
வலுவான நூற்றெட்டு வுருவம் போடு
சன்னமின்னா மரத்தடியி லிருந்து கொண்டு
சதிராக ஆணிகொண் டடித்தி டாயே. 6


அடித்தமுளை பிடுங்கிவைத் திறுக்கிப் போடு
ஆனந்த வுருக்குலைந்து பட்டுப் போகும்
தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தானுந்
தொகைமுடிந்து வாச்சுதடா விந்தப் போக்கு
விடுத்தபின்பு விடமேறிக் கருவிப் போகும்
விரிந்துரைத்தேன் பூட்டிதுவே வீண் போகாது
தடுத்துவிடு நகரத்தி லடித்துப் பாரு
தட்டழிந்து உயிர்புதலாய்ச் சேத மாமே. 7


ஆமப்பா அடிதரிசிங் களத்தி லானால்
அதியங்காண் கண்டவர்க்கே யடைக்க லம்போம்
வீமப்பா வெளிதிறந்து சொன்னேன் பாரு
விளையாட்டே யில்லையடா இந்தப் போக்கு
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கிச்
சுருக்கெனவே தியானிப்பா யாத்தாள் மூலம்
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு
தவறாது ராமனுடை வாக்யந் தானே. 8


தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு
தனதான நூற்றெட்டுக் குள்ளே சித்தி
ஆனென்ற அண்டர் பதியெட்டு மாடும்
அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்
கோனென்ற கோடு சித்துக் கணத்திலாடுங்
குணமாக ரேவதிநாட் செய்ய நன்று
வானென்ற அட்டமியிற் செய்ய நன்று
வளர்பிறையில் செய்தவனே யோகி யாமே. 9


யோகியா யாவதற்கீ துனக்குச் சொன்னேன்
ஓகோகோ முன்னுரைத்த மூலத் தாலே
யோகிகளா யேகாந்த வல்லி யாட்கிங்
ஏட்டிலே யெழுதினதால் எல்லா மாச்சு
தாகிகளாயத் தாயுடைய கிருபை யாலே
தவமாகும் மவமாகும் சுபமுண்டாகும்
மோகிகளால் மூலபூசா விதிபத் தாலே
முத்திபெறச் சித்திவிளை பத்து முற்றே. 10

அழுகணிச் சித்தர் பாடல்கள்-2

சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி! 21


பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி! 22


கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
கடுகளவு காணாதோ! 23


பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன ? 24


ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேனடி! 25


தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ ? 26


அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ! 27


உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ ? 28


காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன ? 29


சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ! 30


புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ? 31


வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ! 32


ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி
அருளடைய வேணுமென்று
தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி
தற்சொரூபங் காட்டி யென்னை 33


கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி
கொண்டான் குருவாகி
கள்களப் புலனறுக்க - ஆத்தாடி
காரணமாய் வந்தாண்டி. 34


ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி
ஐம்பத்தோர் அக்கரமும்
சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி
சுட்டான் துரிசறவே. 35


வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
மாண்டுவிழக் கண்டேண்டி
தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
தலைகெட்டு வெந்ததடி. 36


மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
மலர்பறித்துத் தூவாமல்
நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
நின்றநிலை காணேண்டி. 37


பாடிப் படித்து - ஆத்தாடி
பன்மலர்கள் சாத்தாமல்
ஓடித் திரியாமல் - ஆத்தாடி
உருக்கெட்டு விட்டேண்டி. 38


மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
பேசாப் பெருமையன் காண். 39


புத்தி கலங்கியடி - ஆத்தாடி
போந்தேன் பொரிவழியே
பதித்தறியாமல் - ஆத்தாடி
பாழியில் கவிழ்ந்தேனே. 40


தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி
தொல் பொருளை அறியார்கள் . . .

(முடிந்தது)

அழுகணிச் சித்தர் பாடல்கள் -1

கலித்தாழிசை

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
விளையாட்டைப் பாரேனோ! 1


எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
நிலைகடந்து வாடுறண்டி! 2


முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!
கோலமிட்டுப் பாரேனோ! 3


சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ! 4


பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ! 5


எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ! 6


கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ! 7


ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ! 9


பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ! 10

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! 11


அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ! 12


காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ! 13


உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி! 14


மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி! 15


காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ! 16


தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்! 17


பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ! 18


கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ? 19


கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே! 20

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-4

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-4

சாத்திரம் இல்லையடி .....அகப்பேய்!
சலனங் கடந்ததடி
பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்!
பாவனைக் கெட்டாதே. 76
என்ன படித்தால்என் .....அகப்பேய்!
ஏதுதான் செய்தால்என்
சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்!
சுட்டது கண்டாயே. 77
தன்னை அறியவேணும் .....அகப்பேய்!
சாராமற் சாரவேணும்
பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்!
பேயறி வாகுமடி. 78
பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்!
பிறவி தொலையாதே
இச்சை அற்றவிடம் .....அகப்பேய்!
எம்இறை கண்டாயே. 79
கோலம் ஆகாதே .....அகப்பேய்!
குதர்க்கம் ஆகாதே
சாலம் ஆகாதே .....அகப்பேய்!
சஞ்சலம் ஆகாதே. 80
ஒப்பனை அல்லவடி .....அகப்பேய்!
உன்ஆணை சொன்னேனே
அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்!
ஆராய்ந்து இருப்பாயே. 81
மோட்சம் வேண்டார்கள் .....அகப்பேய்!
முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்!
சின்மய மானவர்கள். 82
பாலன் பிசாசமடி .....அகப்பேய்!
பார்த்தக்கால் பித்தனடி
கால மூன்றுமல்ல .....அகப்பேய்!
காரியம் அல்லவடி. 83
கண்டதும் இல்லையடி .....அகப்பேய்!
கண்டவர் உண்டானால்
உண்டது வேண்டடியோ .....அகப்பேய்!
உன்ஆணை சொன்னேனே 84
அஞ்சயும் உண்ணாதே .....அகப்பேய்!
ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்!
நிட்டையில் சேராதே. 85
நாதாந்த உண்மையிலே .....அகப்பேய்!
நாடாதே சொன்னேனே
மீதான சூதானம் .....அகப்பேய்!
மெய்யென்று நம்பாதே. 86
ஒன்றோடு ஒன்றுகூடில் .....அகப்பேய்!
ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும் .....அகப்பேய்!
நில்லாது கண்டாயே. 87
தோன்றும் வினைகளெல்லாம் .....அகப்பேய்!
சூனியங் கண்டாயே
தோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்!
சுத்த வெளிதனிலே. 88
பொய்யென்று சொல்லாதே .....அகப்பேய்!
போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்!
வீடு பெறலாமே. 89
வேதம் ஓதாதே .....அகப்பேய்!
மெய்கண்டோ ம் என்னாதே
பாதம் நம்பாதே .....அகப்பேய்!
பாவித்துப் பாராதே. 90
------------------------------------------------
2. பரவை - கடல்
3. நடம் - கூத்து
4. நாலுபதம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்
6. வாக்காதி ஐவர் - வாக்கு, பாதம், பாணி, பாயுரு,
உபத்தம் ஆகிய கர்மேந்திரியங்கள்
7. மித்தை - பொய்
11. பிருதிவி - மண்
12. தேயு - தீ
17. அத்தி - யானை, நாடி
25. சரியை - கடவுளை கோவிலில் வைத்து வழிபடுதல்;
கிரியை - கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதல்
28. அறைய - கூற
34. ஆறு - வழி
52. குஞ்சிதபாதம் - நடனத்தில் வளையத் தூக்கிய பாதம்
69. மரக்கா - மரச்சோலை;
வேழம் - விலாம்பழத்தை பற்றும் ஒரு நோய்
72. பசாசம் - பிசாசு
74. வாசாம கோசரம் - வாக்குக்கு எட்டாதது
80. கோலம் - அலங்காரம்
82. சின்மயம் - அறிவு வடிவான கடவுள் நிலை
85. நிட்டை - சிவயோகம்
86. சூதானம் - சாக்கிரதை

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-3

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்

பரத்தில் சென்றாலும் .....அகப்பேய்
பாரிலே மீளுமடி
பரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய்
பாழது கண்டாயே. 51
பஞ்ச முகமேது .....அகப்பேய்
பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி .....அகப்பேய்
குருபா தங்கண்டாயே. 52
பங்கம் இல்லையடி .....அகப்பேய்
பாதம் இருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய்
கண்டு தெளிவாயே. 53
தானற நின்றவிடம் .....அகப்பேய்
சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே .....அகப்பேய்
ஊனமொன்று இல்லையடி. 54
சைவம் ஆருக்கடி .....அகப்பேய்
தன்னை அறிந்தவர்க்கே
சைவம் ஆனவிடம் .....அகப்பேய்!
சற்குரு பாதமடி. 55
பிறவி தீரவென்றால் .....அகப்பேய்!
பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள் .....அகப்பேய்!
சும்மா இருப்பார்கள். 56
ஆரலைந் தாலும் .....அகப்பேய்!
நீயலை யாதேடி
ஊர லைந்தாலும் .....அகப்பேய்!
ஒன்றையும் நாடாதே. 57
தேனாறு பாயுமடி .....அகப்பேய்!
திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி .....அகப்பேய்!
ஒன்றையும் நாடாதே. 58
வெள்ளை கறுப்பாமோ .....அகப்பேய்!
வெள்ளியுஞ் செம்பாமோ
உள்ளது உண்டோ டி .....அகப்பேய்!
உன் ஆணை கண்டாயே. 59
அறிவுள் மன்னுமடி .....அகப்பேய்!
ஆதாரம் இல்லையடி
அறிவு பாசமடி .....அகப்பேய்!
அருளது கண்டாயே. 60
வாசியிலே றியதடி .....அகப்பேய்!
வான் பொருள் தேடாயோ
வாசியில் ஏறினாலும் .....அகப்பேய்!
வாராது சொன்னேனே. 61
தூராதி தூரமடி .....அகப்பேய்!
தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ .....அகப்பேய்!
பாழ்வினைத் தீரவென்றால். 62
உண்டாக்கிக் கொண்டதல்ல .....அகப்பேய்!
உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்!
கற்வனை அற்றதடி. 63
நாலு மறைகாணா .....அகப்பேய்!
நாதனை யார் காண்பார்
நாலு மறை முடிவில் .....அகப்பேய்!
நற்குரு பாதமடி. 64
மூலம் இல்லையடி .....அகப்பேய்!
முப்பொருள் இல்லையடி
மூலம் உண்டானால் .....அகப்பேய்!
முத்தியும் உண்டாமே. 65
இந்திர சாலமடி .....அகப்பேய்!
எண்பத்தொரு பதமும்
மந்திரம் அப்படியே .....அகப்பேய்!
வாயைத் திறவாதே. 66
பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்!
பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே .....அகப்பேய்!
கேள்வியும் இல்லையடி. 67
சாதி பேதமில்லை .....அகப்பேய்!
தானாகி நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்!
ஒன்றுந்தான் இல்லையடி. 68
சூழ வானமடி .....அகப்பேய்!
சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி .....அகப்பேய்!
மெய்யது கண்டாயே. 69
தானும் இல்லையடி .....அகப்பேய்!
நாதனும் இல்லையடி
தானும் இல்லையடி .....அகப்பேய்!
சற்குரு இல்லையடி. 70
மந்திரம் இல்லையடி .....அகப்பேய்!
வாதனை இல்லையடி
தந்திரம் இல்லையடி .....அகப்பேய்!
சமயம் அழிந்ததடி. 71
பூசை பசாசமடி .....அகப்பேய்!
போதமே கோட்டமடி
ஈசன் மாயையடி .....அகப்பேய்!
எல்லாமும் இப்படியே. 72
சொல்ல லாகாதே .....அகப்பேய்!
சொன்னாலும் தோடமடி
இல்லை இல்லையடி .....அகப்பேய்!
ஏகாந்தங் கண்டாயே. 73
தத்துவத் தெய்வமடி .....அகப்பேய்!
சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்!
மாயை வடிவாமே. 74
வார்த்தை அல்லவடி .....அகப்பேய்!
வாசா மகோசரத்தே
ஏற்ற தல்லவடி .....அகப்பேய்!
என்னுடன் வந்ததல்ல. 75

என் செல்ல நாய்

என் செல்ல நாய்

எங்கள் வீட்டிலும் ஒரு நாய் வளர்க்கிறோம்.எனக்கு நாய்க்குட்டி என்றாலே பிரியம் அதிகம்.சிறுவயதில் நானும் என் தம்பியும் ரோட்டில் அனாதையாக கிடக்கும் நாய்க்குட்டிகளை வீட்டிற்கு எடுத்து வந்துவிடுவோம்.அது பெரும்பாலும் பெண்குட்டியாக தான் இருக்கும்.(மனிதன் மட்டுமல்ல நாயும் பெண்ணாக பிறந்தால் மரியாதை கிடைக்காது இந்த சமூகத்தில்...)அதனால் வீட்டில் பெரியவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஆனால் எங்களுக்கு அந்த வயதில் இந்த பேதமெல்லாம் தெரியாது.அது ஒரு நாய்க்குட்டி அவ்வளவுதான்.

அப்புறம் அந்த நாய்க்குட்டி மீண்டும் தெருவில் விடப்பட்டுவிடும்.நாங்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஓய்ந்துவிடுவோம்.சில நாட்களில் அந்த நாய்க்குட்டி நினைவுகளிலிருந்து அகன்று விடும்.மீண்டும் ஏதாவது நாய்க்குட்டி தெருவில் கிடைக்கும் வரை அந்த ஏக்கம் நீடிக்கும்.கிடைத்துவிட்டால் பழைய கதைதான்.

நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது பத்தாம் வகுப்பு விடுமுறையில்தான்.அப்பாவின் தோட்டம் இருக்கும் ஊரில் தெரிந்தவர்கள் வீட்டில் ஒரு நாய் குட்டி போட்டிருப்பதாகவும்,அதில் ஒரு குட்டியை அப்பா கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று அவர்கள் சொல்லிவிட்டனர்.அவர்களால் அத்தனை குட்டிகளையும் பார்க்க முடியாதல்லவா தெரிந்தவர்களில் நன்றாக வளர்ப்பவர்கள் வீடுகளில் குட்டிகளை தந்துவிடுவார்கள்.

என் அம்மாவும் தம்பியும்தான் அந்த குட்டியை தூக்கி வந்தனர்.கருப்பாக,கொழுகொழுவென ஒரு நாய்க்குட்டி.அன்று நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.எல்லோரும் ஒருமனதாக டைகர் என பெயர்வைத்தோம்.அன்பாக கருப்பு பைய என்றும் கூப்பிடுவோம்.குட்டியில் டைகர் செய்த குறும்புகளுக்கு அளவே இல்லை.எல்லாவற்றையும் எழுதுவதற்கு இந்த இடுகை போதாது.அவ்வளவு குறும்புகள்.எப்போதும் துருதுருவென இருக்கும் டைகர்தான் என்னுடைய இரண்டாவது சகோதரன்.

ஒரு நாள் இரவு அம்மா வாசலில் இருந்தபடி என்னை அழைத்தார்.அங்கு சென்று பார்த்தால் வாசல் முழுக்க ஐநூறு ருபாய் தாள்களும்,நூறு ருபாய் தாள்களும் கிழிக்கப்பட்டு சிதறிக் கிடக்கின்றன.நாங்கள் அதிர்ச்சியோடு மூலக் காரணத்தை தேடினோம்.பிறகு அம்மா ஏதோ ஞாபகம் வந்து சாமியறைக்கு சென்று பார்த்த பின் தான் தெரிந்தது.அது மொத்தமும் அம்மாவின் ஒரு மாத சம்பளப்பணம்.டைகர் பைய அதை எடுத்து வந்து இப்படி பண்ணிட்டான்.அப்புறம் என்ன செமத்த அடிதான்.(வீட்டில் ரெண்டு பேரும் டீச்சர்ஸ் வேர.)

ஞாயத்துக் கிழமை கறி செஞ்சா போதும் டைகர் பைய அப்படியே அடியோட மாறிப்போயிடுவான்.அன்னைக்கு சாப்பாடு நேரம் வரைக்கும் சின்ன சத்தம் கூட இருக்காது.அவ்வளவும் நடிப்பு,அவன் முன்னாடி சிவாஜியே தோத்துடுவாருன்னா பாத்துக்கோங்களேன்.இந்த மாதிரி அவன் அட்டூலியங்களை அடுக்கிக்கிட்டே போகலாம்.ஆனாலும் ராத்திரி முழுக்க பயணம் செஞ்சிட்டு அதிகாலை வீட்டுக்கு போகும் போது நமக்காக காத்திருக்கும் அவன் அன்பான வரவேற்பு இருக்குதே,அதுக்கு ஈடுஇணையே கிடையாது.

அப்படியே இந்த படங்களையும் ரசியுங்கள்.இடுகையை படித்த்தோடு மட்டும் சென்று விடாதீர்கள்.எப்படி இருந்தது என கருத்துகளை இடுங்கள்.

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-2

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-2

யோகம் ஆகாதே .....அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி .....அகப்பேய்
தேடாது சொன்னேனே. 26
ஐந்துதலை நாகமடி .....அகப்பேய்
ஆதாயங் கொஞ்சமடி
இந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய்
எம் இறை கண்டாயே. 27
இறைவன் என்றதெல்லாம் .....அகப்பேய்
எந்த விதமாகும்
அறைய நீகேளாய் .....அகப்பேய்
ஆனந்த மானதடி. 28
கண்டு கொண்டேனே .....அகப்பேய்
காதல் விண்டேனே
உண்டு கொண்டேனே .....அகப்பேய்
உள்ளது சொன்னாயே. 29
உள்ளது சொன்னாலும் .....அகப்பேய்
உன்னாலே காண்பாயே
கள்ளமுந் தீராதே .....அகப்பேய்
கண்டார்க்குக் காமமடி. 30
அறிந்து நின்றாலும் .....அகப்பேய்
அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும் .....அகப்பேய்
போகாதே உன்னை விட்டு. 31
ஈசன் பாசமடி .....அகப்பேய்
இவ்வண்ணங் கண்டதெல்லாம்
பாசம் பயின்றதடி .....அகப்பேய்
பரமது கண்டாயே. 32
சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய்
சங்கற்பம் ஆனதெல்லாம்
பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்
பாழ் பலங்கண்டாயே. 33
ஆறு கண்டாயோ .....அகப்பேய்
அந்த வினை தீர
தேறித் தெளிவதற்கே .....அகப்பேய்
தீர்த்தமும் ஆடாயே. 34
எத்தனை காலமுந்தான் .....அகப்பேய்
யோகம் இருந்தாலென் ?
முத்தனு மாவாயோ .....அகப்பேய்
மோட்சமும் உண்டாமோ ? 35
நாச மாவதற்கே .....அகப்பேய்
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் .....அகப்பேய்
பசுக்களும் போகாவே. 36
நாணம் ஏதுக்கடி .....அகப்பேய்
நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால் .....அகப்பேய்
காணக் கிடையாதே. 37
சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
சுட்டது கண்டாயே. 38
உன்றனைக் காணாதே .....அகப்பேய்
ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே .....அகப்பேய்
இடத்தில் வந்தாயே. 39
வானம் ஓடிவரில் .....அகப்பேய்
வந்தும் பிறப்பாயே
தேனை உண்ணாமல் .....அகப்பேய்
தெருவொடு அலைந்தாயே. 40
சைவ மானதடி .....அகப்பேய்
தானாய் நின்றதடி
சைவம் இல்லையாகில் .....அகப்பேய்
சலம்வருங் கண்டாயே 41
ஆசை அற்றவிடம் .....அகப்பேய்
ஆசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி .....அகப்பேய்
எங்ஙனஞ் சென்றாலும். 42
ஆணவ மூலமடி .....அகப்பேய்
அகாரமாய் வந்ததடி
கோணும் உகாரமடி .....அகப்பேய்
கூடப் பிறந்ததுவே. 43
ஒன்றும் இல்லையடி .....அகப்பேய்
உள்ளபடி யாச்சே
நன்றிலை தீதிலையே .....அகப்பேய்
நாணமும் இல்லையடி. 44
சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
சுட்டது சொன்னேனே
எம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய்
என்னையுங் காணேனே. 45
கலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
கண்டார் நகையாரோ?
நிலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
நீயார் சொல்வாயே. 46
இந்து அமிழ்தமடி .....அகப்பேய்
இரவி விடமோடி
இந்து வெள்ளையடி .....அகப்பேய்
இரவி சிவப்பாமே. 47
ஆணல பெண்ணலவே .....அகப்பேய்
அக்கினி கண்டாயே
தாணுவும் இப்படியே .....அகப்பேய்
சற்குரு கண்டாயே. 48
என்ன படித்தாலும் .....அகப்பேய்
எம்முரை யாகாதே
சொன்னது கேட்டாயே .....அகப்பேய்
சும்மா இருந்துவிடு. 49
காடும் மலையுமடி .....அகப்பேய்
கடுந்தவம் ஆனால்என்
வீடும் வெளியாமோ .....அகப்பேய்
மெய்யாக வேண்டாவோ. 50

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-1

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-1

நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே - அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே!

என்று இவர் அலையும் மனதைப் பெண்பேயாக உருவகப்படுத்தி, முன்நிறுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு.

இவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.

இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள்பேசப்படுகின்றன.
--
அகப்பேய் சித்தர் பாடல்கள்
நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே .....அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே. 1
பராபர மானதடி .....அகப்பேய்
பரவையாய் வந்தடி
தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய்
தானே படைத்ததடி. 2
நாத வேதமடி .....அகப்பேய்
நன்னடம் கண்டாயோ
பாதஞ் சத்தியடி .....அகப்பேய்
பரவிந்து நாதமடி. 3
விந்து நாதமடி .....அகப்பேய்
மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம் .....அகப்பேய்
அதனிடம் ஆனதடி. 4
நாலு பாதமடி .....அகப்பேய்
நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால் .....அகப்பேய்
முத்தி அல்லவடி. 5
வாக்காதி ஐந்தடியோ .....அகப்பேய்
வந்த வகைகேளாய்
ஒக்கம் அதானதடி .....அகப்பேய்
உண்மையது அல்லவடி. 6
சத்தாதி ஐந்தடியோ .....அகப்பேய்
சாத்திரம் ஆனதடி
மித்தையும் ஆகமடி .....அகப்பேய்
மெய்யது சொன்னேனே. 7
வசனாதி ஐந்தடியோ .....அகப்பேய்
வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி .....அகப்பேய்
திடன் இது கண்டாயே. 8
காரணம் ஆனதெல்லாம் .....அகப்பேய்
கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே .....அகப்பேய்
வந்த விதங்கள் எல்லாம். 9
ஆறு தத்துவமும் .....அகப்பேய்
ஆகமஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும் .....அகப்பேய்
வந்தது மூன்றடியே. 10
பிருதிவி பொன்னிறமே .....அகப்பேய்
பேதமை அல்லவடி
உருவது நீரடியோ .....அகப்பேய்
உள்ளது வெள்ளையடி. 11
தேயு செம்மையடி .....அகப்பேய்
திடனது கண்டாயே
வாயு நீலமடி .....அகப்பேய்
வான்பொருள் சொல்வேனே. 12
வான மஞ்சடியோ .....அகப்பேய்
வந்தது நீகேளாய்
ஊனமது ஆகாதே .....அகப்பேய்
உள்ளது சொன்னேனே. 13
அகாரம் இத்தனையும் .....அகப்பேய்
அங்கென்று எழுந்ததடி
உகாரங் கூடியடி .....அகப்பேய்
உருவாகி வந்ததடி. 14
மகார மாயையடி .....அகப்பேய்
மலமது சொன்னேனே
சிகார மூலமடி .....அகப்பேய்
சிந்தித்துக் கொள்வாயே. 15
வன்னம் புவனமடி .....அகப்பேய்
மந்திரம் தந்திரமும்
இன்னமும் சொல்வேனே .....அகப்பேய்
இம்மென்று கேட்பாயே. 16
அத்தி வரைவாடி .....அகப்பேய்
ஐம்பத்தோர் அட்சரமும்
மித்தையாங் கண்டாயே .....அகப்பேய்
மெய்யென்று நம்பாதே. 17
தத்துவம் ஆனதடி .....அகப்பேய்
சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்
பூத வடிவலவோ. 18
இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய்
எம்இறை அல்லவடி
அந்த விதம்வேறே .....அகப்பேய்
ஆராய்ந்து காணாயோ. 19
பாவந் தீரவென்றால் .....அகப்பேய்
பாவிக்க லாகாதே
சாவதும் இல்லையடி .....அகப்பேய்
சற்குரு பாதமடி. 20
எத்தனை சொன்னாலும் .....அகப்பேய்
என் மனந்தேறாதே
சித்து மசித்தும்விட்டே .....அகப்பேய்
சேர்த்துநீ காண்பாயே. 21
சமய மாறுமடி .....அகப்பேய்
தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம் .....அகப்பேய்
ஆராய்ந்து சொல்வாயே. 22
ஆறாறும் ஆகுமடி .....அகப்பேய்
ஆகாது சொன்னேனே
வேறே உண்டானால் .....அகப்பேய்
மெய்யது சொல்வாயே. 23
உன்னை அறிந்தக்கால் .....அகப்பேய்
ஒன்றையும் சேராயே
உன்னை அறியும்வகை .....அகப்பேய்
உள்ளது சொல்வேனே. 24
சரியை ஆகாதே .....அகப்பேய்
சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் .....அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை. 25

சித்தமெல்லாம் சிவமயம்

சித்தமெல்லாம் சிவமயம்

சித்தர்கள் பற்றி நான் அறிந்த செய்திகள் மிகவும் வியக்கத்தக்கதாய் இருந்தது.எப்போதும் ஈசன் நாமம் சொல்லித் திரியும் வெறும் முனிவர்களாய் மட்டுமே நினைத்திருந்தேன்.ஆனால் அவர்களின் மகிமைகள் உலகிற்கு தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.அவர்கள் மனிதனாக பிறந்தாலும் மனம் சொன்னபடி பித்தனாக திரிந்தவர்கள்.அந்த மனதினை ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள்.அழியாத உடல் பெற்றவர்கள்.கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள்.எதையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம் அறிந்திருந்தனர்.முக்காலத்தையும் உணர்ந்தவர்கள்.காற்று,நீர்,நெருப்பு என எங்கும் உலவுவார்கள்.இத்தனை மகிமைமிக்கவர்கள் நம்முடன் வாழ்ந்தார்கள் என நினைக்கும் போதே பெருமையாக இருக்கின்றது.

இனி இந்த மர்மயோகிகளின் மாய உலகுக்குள் செல்ல தயாராகுங்கள்.முதலில் நாம் அறிந்து கொள்ளப் போவது இந்த பதினெட்டு மகாபுருசர்களின் நாமங்கள்.

1. திருமூலர்
2. தேரையார்
3. கருவூரார்
4. இடைக்காடர்
5. பாம்பாட்டி சித்தர்
6. சிவவாக்கியர்
7. உரோம ரிஷி
8. சட்டை முனி
9. அகப்பேய் சித்தர்
10. போகர்
11. கோரக்கர்
12. குதம்பைச் சித்தர்
13. காகபுசுண்டர்
14. கொங்கணர்
15. பட்டினத்தார்
16. திருமாளிகைத் தேவர்
17. ராமதேவர் என்கிற யாகோபு
18. நாராயணப் பிராந்தர்

பெயர்களை தெரிந்து கொண்டீர்களா,இவர்களின் சில பெயர்களை கேட்கும் போது எங்கோ கேள்விப் பட்டதினைப் போல இருக்கும்.உண்மைதான்.இதில் வெகு சிலர் நமக்கு நன்கு பழக்கமானவர்கள்.எப்படி என்கிறீர்களா.எல்லாம் தமிழ் செய்த மாயம்.ஆம் இவர்கள் தங்களின் தமிழ் எழுத்துகள் மூலம் நம்மிடையே அறிமுகம் ஆனவர்கள்.திருமூலர் எழுதியது தான் ஒப்பற்ற திருமந்திரம் என்னும் நூல்.இது போல மக்களின் நலன் கருதி அனைத்து சித்தர் பெருமகன்களும் நூல்களை எழுதியுள்ளனர்.இவர்களின் வரலாறுகளை தொடர்ந்து அந்த பாடல்களையும் இந்த இணையதளத்தில் நீங்கள் பெறலாம்.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என வாழ்ந்த சித்தர்களின் புகழைப் பற்றி எழுதுவதற்கு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.தொடர்ந்து சித்தர்களின் பெருமை மிக்க பாடல்கள் வெளிவரும்.

காதல் நினைவுகள்-17

காதல் நினைவுகள்-17
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

17. காதலனுக்குத் தேறுதல்

காதற் பசியினிலே கைக்குவந்த மாம்பழத்தின்
மீதில் இதழ்குவித்து மென்சுவையை நீஉரிஞ்சி
நாவார உண்ணுங்கால் நண்ணுமந்தத் தீங்கனியைச்
சாவான ஓர்குரங்கு தான்பிடுங்கிற் றேயோ!

* * * * *

விழிநோக வையமெல்லாம் தேடி, மிகுக்க
மொழிநோகக் கூவி,நீ முன்பெற்ற கிள்ளையிடம்
காதல்மொழி பழகக் கண்ட பெரும்பூனைச்
சாதல்வந்து கிள்ளைதனைத் தட்டிப் போயிற்றோ!

* * * * *

அறஞ்செய்ய, ஆர்ந்த புகழ்கொள்ளப் பொன்னாற்
புறஞ்செய்தே உள்ளே புதுமாணிக்கம் சொரிந்த
பேழைதனைப் பெற்றும், பெற்றதற்கு நீமகிழ்ந்தும்
வாழத்தொடங்கையிலே மற்றந்தப் பெட்டகத்தை
நோக்கிப்பறிக்க நுழைந்தானா அத்தீய
சாக்காடெனுந் திருடன்! சற்றுந் தனித்ததின்றி
நெஞ்சம் ஒருமித்து, நீரும் குளிரும்போல்
மிஞ்சுகின்ற காதல் விளையாட்டுக் காணுங்கால்
அந்த மயிலை அழகின் களஞ்சியத்தை
சந்தத் தமிழ்ச்சொல் சகுந்தலா தேவியினை
நீ இழந்தாய்! உன்காதல் நெஞ்சு பொறுக்குமோ!

* * * * *

தூயோனே மீனாட்சிசுந்தரனே, என்தோழா!
ஆண்டுநூ றாகநல் லன்பு நுகர்ந்திடினும்
ஈண்டுத் தெவிட்டாத இன்பச் சகுந்தலைதான்
இங்குன்னைத் துன்பம் இறுகத் தழுவ விட்டுத்
திங்கள் இருபதுக்குள் சென்று மறைந்துவிட்டாள்.
அந்தோ உனக்கார்ஓர் ஆறுதலைச்செய்திடுவார்?
சிந்து கண்ணீருக்குத் தேறுதலைச் செய்வார்யார்?

* * * * *

தோழனே மீனாட்சி சுந்தரனே, ஒன்று கேள்;
யாழின் மொழியும், இசைவண்டு நேர்விழியும்
கோத்த முத்துப்பற்கள் குலுங்கும் சிரிப்பழகும்
வாய்த்த நல்வஞ்சி, மற்றொருத்தி இங்குள்ளாள்,
தேடுகின்றாள் உன்னை! நீதேடந்தப் பொன்னை,ஏன்
வாடுகின்றாய்? ஏன்உன் மலர்விழியை வாட்டுகின்றாய்?

* * * * *

அன்னவளால் உன்றன் அருங்குறைகள் தீர்ந்துவிடும்!
முன்னர் எழுந்திருநீ முழுநிலவு காண்பதுபோல்!
அன்னவளைக் கண்டு நிலைமை அறிவிப்பாய்!
இந்நாட்டின் முன்னேற்றம் எண்ணி உழைக்கின்ற
நன்னோக்கம் நண்ணும் சுயமரியா தைக்காரர்
காட்டும் நெறியே கடிமணத்தைநீ முடிப்பாய்!
மீட்டும் சகுந்தலையை எண்ணியுளம் வாடாதே!
அவ்வழகே இவ்வழகும்! அம்மயில்தான் இம்மயிலும்!
செவ்வையுற இன்பத் திருவிழாவைத் தொடங்கு!
நீயும் புதுமனையும் நீடூழி வாழியவே!
வாயார வாழ்த்து கின்றேன் நான்!

காதல் நினைவுகள்-16

காதல் நினைவுகள்-16
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

16. ஒரே குறை
அழகிருக்கும் அவளிடத்தில் அன்பி ருக்கும்
அறிவிருக்கும்! செயலிலுயர் நெறியி ருக்கும்
விழியிருக்கும் சேலைப்போல்! கவிதை யின்பம்
வீற்றிருக்கும் அவளரிய தோற்றந் தன்னில்
மொழியிருக்கும் செந்தமிழில் தேனைப் போலே
முகமிருக்கும் நிலவுபோல்! என்னைக் காணும்
வழியிருக்கும்; வரமாட்டாள்; வந்தெ னக்கு
வாழ்வளிக்கும் எண்ணந்தான் அவள்பா லில்லை!

திருவிருக்கும் அவளிடத்தில்! திறமி ருக்கும்!
செங்காந்தள் விரல்நுனியின் நகத்த்¢ லெல்லாம்
மெருகிருக்கும்! இதழோரப் புன்சி ரிப்பில்
விளக்கிருக்கும்! நீள்சடையில் மலரி ருக்கும்!
புருவத்தில் ஒளியிருக்கும்; வளைவி ருக்கும்!
போய்ப்போய்நான் காத்திருக்கும் இடமும் மிக்க
அருகிருக்கும்! வரமாட்டாள்; உடையும் நெஞ்சுக்
கணைகோலும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பண்பிருக்கும் அவளிடத்தில்! ஆடு கின்ற
பச்சைமயில் போல்நடையில் அசைவி ருக்கும்!
மண்ணிருக்கும் கல்தச்சுச் சுதைநூல், நல்ல
வார்ப்படநூல் ஓவியநூல் வல்லார் எல்லாம்
பெண்ணிருக்கும் அமைப்பறியும் ஒழுங்கி ருக்கும்!
பிறர்துயின்றபின், என்போல் இரவில் மூடாக்
கண்ணிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதற்
கனல்மாற்றும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

கனிவிருக்கும் அவளிடத்தில்! சங்கைப் போலும்
கழுத்திருக்கும்! உயர்பசுமை மூங்கிலைப் போல்
தனித்துயர்ந்த தோளிருக்கும்! கன்னம், ஈரச்
சந்தனத்துப் பலகைபோல் குளிர்ந் திருக்கும்!
இனித்திருக்கும் பொன்னாடை! அவள் சிலம்பில்
எழும்ஒலியில் செவியனுப்பி நிற்பேன். அந்த
நினைவிருக்கும்; வரமாட்டாள்; சாவி னின்று
நீக்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

வளமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் தூய்மை!
மயிலிறகின் அடியைப்போல் பல்லி லெல்லாம்
ஒளியிருக்கும்! உவப்பிருக்கும் காணுந் தோறும்!
உயர்மூக்கோ எள்ளுப்பூப் போலி ருக்கும்!
தெளிவிருக்கும் பேச்சிலெல்லாம் சிரிப்பி ருக்கும்!
செழும்ஊரார் அறியாமல் வரவும் கொல்லை
வெளியிருக்கும்! வரமாட்டாள்; என் விழிக்கு
விருந்தளிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பொறையிருக்கும் அவளிடத்தில்! கொல்லை தன்னில்
பூம்பாகற் கொடிதனது சுருட்கை யூன்றி
உறைகூறை மேற்படர்ந்து சென்றிட் டாலும்
ஒருதொடர்பும் கூறையிடம் கொள்ளாமை போல்
பிறரிருக்கும் உலகத்தில் என்னையே தன்
பெறற்கரிய பேறென்று நெஞ்சிற் கொள்ளும்
முறையிருக்கும்! வாமாட்டாள்; வந்தே இன்ப
முகங்காட்டும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அறமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் வாய்மை!
அண்டையிலே பெற்றோர்கள் இருக்கும் போதும்
புறமிருக்கும் என்மீதில் உயிர் இருக்கும்!
'பூத்திருக்கும் நான்காத்த முல்லை' யென்றும்
'நிறம்காண வேண்டும்'என்றும் சாக்குச் சொல்லி
நிழல்போல என்னிடத்தில் வரவும் நல்ல
திறமிருக்கும்! வரமாட்டாள்; வந்தென் நோயைத்
தீர்க்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

உயர்விருக்கும் அவளிடத்தில்! இருக்கும் நேர்மை!
உடலாவி பொருளிவற்றில் நானும்,தானும்
அயலில்லை என்னுமோர் உளம் இருக்கும்!
அசைகின்ற இதழிலெல்லாம் அத்தான் என்ற
பெயரிருக்கும்! எவற்றிலுமே எனை யழைக்கும்
பித்திருக்கும்! மாடியினின் றிறங்க எணிக்
கயிறிருக்கும்! வரமாட்டாள்; என்செய்வேன்! நான்
கடைத்தேறும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

சீரிருக்கும் அவளிடத்தில்! உலகம் போற்றும்
செந்தமிழ்மங் கைக்கிருக்கும் சிறப் பிருக்கும்!
தார்இருக்கும் நெடுந்தோளான் பாண்டி நாட்டான்
தானேநான் எனும்கொள்கை தனக் கிருக்கும்.
ஊரிருக்கும் தூக்கத்தில் கொல்லைப் பக்கத்
துயர்கதவின் தாழ்திறந்து வரவோ பாதை
நேரிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதல்
நெருப்பவிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அருளிருக்கும் அவளிடத்தில்! இசையி ருக்கும்!
ஆடவனும், ஓர்மகளும் ஒப்ப நோக்கி
இருள்கிழித்து வெளிப்படுமோர் நிலவு போல
இரண்டுளத்தும் திரண்டெழுந்த காத லுக்குத்
திரைஎன்ன மறைவென்ன? அவள்என் தோள்மேல்
தேன்சிட்டைப் போற்பறந்து வருவ தற்கும்
கருத்திருக்கும் வரமாட்டாள்;வந்தெ னக்குக்
காட்சிதரும் எண்ணந்தான் அவள் பாலில்லை.

காதல் நினைவுகள்-15

காதல் நினைவுகள்-15
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

15. உணர்வெனும் பெரும்பதம்

கதிரவனை வழியனுப்பிக்
கனிந்த அந்திப் போதில்
கடற்கரையின் வெண் மணலில்
தனியிருந்தேன். கண்ணைச்
சதிபுரிந்து நெஞ்சினுள்ளே
ஒருமங்கை தோன்றிச்
சதிராடி நின்றாள். அப்
புதுமை என்ன் சொல்வேன்!
மதிபோலும் முகமுடையாள்
மலர்போலும் வாயாள்
மந்தநகை காட்டிஎனை
'வா' என்று சொன்னாள்.
புதையல் வந்து கூவுங்கால்
'போ' என்றா சொல்வேன்?
'பூங்காவனக் குயிலே
யாரடி நீ?' என்றேன்.

'உணர்வு' என்றாள்.பின்னென்ன,
அமுதாகப் பெருகும்
ஓடையிலே வீழ்ந்தேன்.'என்
ஈடில்லாச் சுவையே,
துணை என்ன தமிழர்க்குச்
சொல்லேடி' என்றேன்.
'தூய்தான ஒற்றுமைதான்
துணை' என்றாள் மங்கை.
இணையற்ற அந்நிலைதான்
எற்படுங்கால் அந்த
எற்பாட்டுக் கிடையூறும்
எற்படுமோ?' என்றேன்.
'தணல் குளிரும்; இருள் ஒளியாம்
தமிழர் ஒன்று சேர்ந்தால்!
தம்மில் ஒருவனின் உயர்வு
தமக்கு வந்ததாக

எண்ணாத தமிழர்களால்
இடையூறும் நேரும்,
இனத்திலுறும் பொறாமைதான்,
வெடிமருந்துச் சாலை
மண்ணாகும்படி எதிரி
வைத்த கொடும் தீயாம்
வையத்தில் ஒழுக்கமில்லார்
ஏதிருந்தும் இல்லார்
நண்ணுகின்ற அன்புதான்
ஒற்றுமைக்கு வித்து,
நல்ல அந்த வித்தினிலே
தன்னலத்தைச் சிறிதும்
எண்ணாமை செழித்து வரும்
நடுவுநிலை பூக்கும்;
ஏற்றமுறு செயல் காய்க்கும்;
பயன்கனியும்' என்றாள்.

'முன்னேறும் தமிழ் மக்கள்
மதத்துறையை நாடி
மூழ்குதலும் வேண்டுமோ
மொழியேடி' என்றேன்.
'முன்னேற்றம் மதஞ்சொன்னோர்
இதயம் பூஞ்சோலை!
மொழிகின்ற இம்மதமோ
அச்சோலை தன்னைத்
தின்னவந்த காட்டுத்தீ'
என்றுரைத்தாள். இன்பத்
தேனென்று சொல்லுவதோ
அன்னவளின் வார்த்தை?
கன்னல்மொழி உயிர்தழுவ
வீட்டுக்குச் சென்றேன்.
கதிகாட்டும் விழியாளின்
காதல் மறத்தல் உண்டோ!

காதல் நினைவுகள்-14

காதல் நினைவுகள்-14
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

14. தமிழ் வாழ்வு

மாலையில் ஒருநாள் மாடியின் சன்னல்
திறக்கப் பட்டது; சேயிழை ஒருத்தி,
முத்தொளி நெய்து முடித்த ஆடையும்,
பத்தரை மாற்றுப் பசும்பொன் மேனியும்
உடையவ ளாக உலவு கின்றதை
'மருது' தனது மாடியி னின்று
கண்டான்; உவப்பிற் கலந்து நின்றான்!

* * * *

இரண்டு மாடியும் எட்டி இருந்ததால்
மருது, பெண்ணழகை அருகி லிருந்து
காணும் பேறு காணாது வருந்தினான்!
தூயாள் முகத்தொளி தோன்றும்; அம்முகச்
சாயலின்பம் தன்னைக் காண்கிலான்!
உதடு மாணிக்கம் உதிர்ப்பது தெரியும்;
எனினும் அவளின் இதழின் கடையில்
சிந்தும் அழகின் சிறுகோடு காணான்!
அவள்நடை, களிமயில் ஆடும் ஆட்டம்!
எடுத்தடி வைப்பாள்,எழிலிடை துவளும்;
துடித்துப் போவான் தூய மருது!
பொழுது மங்கிப் போவதை எண்ணி
அழுதான் மறையுமே அவள் எழில்என்று!
கண்கள் இருண்டன! கதிரவன் மறைந்தான்!
பெண்ணழகே எனப் பிதற்றிக் கிடந்தான்.
மறுநாட் காலையில் மருதும் சீனுவும்
பெரிதும் மகிழ்ச்சியடு பேசி யிருந்தனர்.
இடையில் சீனு இயம்பு கின்றான்:
'அவளோ அழகின் அரங்கு! நீயோ
இந்நாள் உற்ற இன்னொரு சேரன்;
ஒத்த வயதும், ஒத்த அன்பும்,
உள்ள இருவரின் உயர்ந்த காதலை
ஓராயிரம் ஆண்டுக் கொருமுறை யாக
இவ்வுலகு இன்றுகண்டு இன்பம் பெறட்டுமே!
இதற்குமுன் உனக்கென ஏற்பாடு செய்த
'கன்னல்' என்னும் கசக்கும் வேப்பிலையை
என்ன வந்தாலும் இகழ்ந்து தள்ளிவிடு!
மாடியில், நேற்று மாலைநீ கண்ட
ஆடுமயி லின்பெயர் அகல்யா என்பதாம்,
அவள் உனக்கேதான் இவண்பிறந் துள்ளாள்;
பச்சை மயிலுக்குப் பாரில்நீ பிறந்தாய்;
அவள்மேல் நீஉன் அன்பைச் சாய்த்ததைச்
சொன்னேன்; உன்னைத்தொட அவள் துடித்தாள்.
மங்கை அழகுக்கு மன்னன் ஒருவன்
அங்காந் திருப்பதை அவளும் அறிவாள்;
அவனைத் துரும்பென அகற்றி, நெஞ்சில்
உவகை பாய்ச்சிஉன் உருவை நட்டாள்!
அன்னை தந்தையர்க் கவளோ ஒருபெண்,
என்ன செய்வார்? ஏந்திழை சொற்படி
உன்னை மருகனாய் ஒப்பி விட்டனர்.

* * * *

முதலில் உன்றன் முழுச்சொத் தினையும்
இதுநாள் அவள்மேல் எழுதி வைத்துவிடு!
நகைகளைக் கொடுத்தால் நான்கொண்டு கொடுப்பேன்.
பிறகுதான் அவளிடம் பேச லாகும்நீ!
பார்ப்பதும் பிறகுதான்! பழகலும் பிறகுதான்!
குலதரு மத்தைக் குலைக்க லாகுமா?
என்று சீனு இயம்புதல் கேட்ட
இளையோன் 'நண்பனே இன்னொரு முறைஅக்
கிளியை மாடியில் விளையாட விடு;
மீண்டும் நான்காண விரும்பு கின்றேன்.'
என்று கெஞ்சினான்! ஏகினான் சீனு!
மாடியின் சன்னலை மங்கையின் கைகள்
ஓடித் திறந்தன. ஒளிவிழி இரண்டும்,
எதிர்த்த மாடியில் இருந்த மருதுமேல்
குதித்தன. மங்கைமேல் குளிர்ந்தன அவன் விழி.
அவன் விழி அவள்விழி அன்பிற் கலந்தன
அகல்யா சிரித்தாள், அவனும் சிரித்தான்
கைகள் காட்டிக் கருத்து ரைத்தார்கள்.
'என் சொத்துக்களை உன் பேருக்கே
எழுதி வைக்கவா?' என்றான் மருது!
'வேண்டாம்! உன்றன் விருப்பம் வேண்டும்'
என்றுகை காட்டினாள் எழிலுறும் அகல்யா.
'அழகிய நகையெல்லாம் அனுப்பவா?' என்றான்.
வேண்டாம் என்று மென்னகை அசைந்தாள்.
'இன்று மாலை இவ்வூர்ப் புறத்தில்
கொன்றையும் ஆலும் கொடும்பாழ் கிணறும்
கூடிய தனியிடம் நாடிவா' என்று
மங்கை உரைத்து மலருடல் மறைந்தாள்.

* * * *

'சொத்துவேண் டாம்உன் தூய்மை வேண்டும்.
நகைவேண் டாம்உன் நலமே வேண்டும் என்
றுரைத்தாள் அகல்யா; ஊர்ப்புறக் கொன்றை
மரத்தின் அருகில் வா என்று சொன்னாள்.'
என்று சீனுவிடம் இயம்பினான் மருது.
'நன்று நன்று நான் போகின்றேன்'
என்று சீனன் எரிச்சலாய்ச் சென்றான்.
மாலையில் கதிரவன் மறையும் போதில்
ஆலின் அடியில் அகல்யா அமர்ந்துதன்
இன்பன் வரவை எதிர்சென் றழைக்க
அன்பைத் தன்மொழி யதனில் குழைத்துப்
பண்ணொன்று யாழொடு பாடி யிருந்தாள்.
கொன்றை யடியில் குந்திக் கன்னலும்
வன்னெஞ் சுடையான் வரவு நோக்கிச்
சினத்தைத் தமிழொடு சேர்த்துப் பாடினாள்.
மருது விரைவில் வந்து கொண்டிருந்தான்.
ஒருகுரல்! தெளிந்த 'ஏசல்' ஒன்றும்,
பொருளில்லாத புதுக் குரல் ஒன்றும்,
செவியில் வீழ்ந்தன.திடுக்கிட் டவனாய்க்
கன்னல் வந்த காரணம் யாதென
உன்னினான்; சீனன் உளவென உணர்ந்தான்.
மேலும், 'என்வாழ்வை வீணாக் கியநீ
ஞாலமேல் வாழுதி நன்றே' என்ற
வசைமொழி கன்னல் வழங்குதல் கேட்டான்.
மருதுதான் அகல்யா வாழும் ஆலிடை
விரைவிற் சென்றான். மெல்லியின் பாட்டில்
தமிழிசை இருந்தது. தமிழ் மொழி இல்லை!
செழுமலர் இருந்தது திகழ்மண மில்லை!
வள்ள மிருந்தது வார்ந்த தேனில்லை!
தணலால் அவனுளம் தாக்கப் பட்டது!
கௌவிய தவனைக் கரிய இருட்டு!
வாழும் நெறியை மருது தேடினான்!
மேலும் 'என் வாழ்வை வீணாக்கிய நீ
ஞாலமேல் வாழுதி நன்றே' என்ற
கடுமொழி தன்னைக் கன்னல் கூறினாள்!
அகல்யா காதலால் ஆயிரம் சொன்னாள்!
சொன்னவை தெலுங்கர்க்குச் சுவைதரத் தக்கவை!
'பொருள் விளங்காமொழி புகலும் ஒருத்தி
இருளில் இட்ட இன்ப ஓவியம்.
அழகும் பண்பும் தழையக் கிடப்பினும்
பழகுதமிழ் அறியாப் பாவை தமிழருக்கு
உயிரில் லாத உடலே அன்றோ!
கடுமொழி யேனும் கன்னலின் தமிழ்த்தேன்
வடிவிலா வாழ்வுக் கடிப்படை யன்றோ?'
என்றான்; விலகினான்; கன்னலை நோக்கி!
அகல்யா மருதினை அகலாது தொடர்ந்தாள்.
மருது, கன்னலை மன்னிப்பு வேண்டினான்!
அத்தான் வருகஎன் றழைத்த கன்னலில்
மொய்த்தான்; மலரின் மூசு வண்டுபோல்!
'கன்னல்' 'மருது' தம் கண்ணும் நெஞ்சும்
இன்னல் உலகில் இல்லவே இல்லை;
பாழுங் கிணற்றில் அகல்யா
வீழ்ந்ததும் காணார்; மேவினர் இன்பமே!

காதல் நினைவுகள்-13

காதல் நினைவுகள்-13
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

13. தும்பியும் மலரும்

மகரந்தப் பொடியைத் தென்றல் - வாரிக்கொண் டோடி
அகம் நொந்த தும்பி எதிர் - அணியாகச் சிந்தும்!
வகை கண்ட தும்பி தன் - வயிடூரியக்கண்
மிகவே களிக்கும் அவள் - விஷயந் தெரிந்தே!
'பூப்பெய்தி விட்டாள்என் - பொற்றாமரைப் பெண்
மாப்பிள்ளை என்னை அங்கு - வர வேண்டுகின்றாள்
நீர்ப்பொய்கை செல்வேன்' என - நெஞ்சில் நினைக்கும்;
ஆர்க்கின்ற தீம்பண் ஒன்றை - அவளுக் கனுப்பும்!
அழகான பொய்கை மணி - அலைமீது கமலம்
பொழியாத தேனைத் தன் - புதுநாதன் உண்ண
வழிபார்த் திருந்தாள் உடல் - மயலாற் சிவந்தாள்!
தழையும்பண் ணொன்று வரத் - தன்மெய் சிலிர்த்தாள்.
கமழ் தாமரைப் பெண் இதழ்க் - கலைசோரக் கைகள்
அமையாது தாழ ஆ! - ஆ!! என்றிருந்தாள்.
இமைப்போதில் தும்பி காதல் - இசை பாடி வந்தான்
கமழ் தாமரைப் பெண் இதழ்க் - கையால் அணைத்தாள்.

காதல் நினைவுகள்-12

காதல் நினைவுகள்-12
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

12. வாளிக்குத் தப்பிய மான்

கணக்கப் பிள்ளையின்மேல்--அவளோ
கருத்தை வைத்திருந்தாள்.
மணக்கும் எண்ணத்தினை--அவளோ
மறைத்து வைத்திருந்தாள்.
பணக்கு வியல்தனைப்--பெரிதாய்ப்
பார்த்திடும் வையத்திலே,
துணைக்கு நல்லவனின்--பெயரைச்
சொல்வதும் இல்லைஅவள்.

அழகிய கணக்கன்--உளமோ
அவள் அழகினிலே
முழுகிய தன்றி-- மணக்கும்
முயற்சி செய்ததில்லை.
புழுதி பட்டிருக்கும்--சித்திரம்
போல இரண்டுளமும்
அழிவு கொள்ளாமல்--உயிரில்
ஆழ்ந்து கிடந்தனவாம்.

மணப்பிள்ளை தேடி--அலைந்தே
மங்கையின் பெற்றோர்கள்
பணப்பிள்ளை கிடைக்க--அவன்மேல்
பாய்ந்து மணம்பேசி
இணக்கம் செய்துவிட்டார்--மணமும்
இயற்றநாள் குறித்தார்.
மணத்தின் ஓலைப்படி--நகரின்
மக்களும் வந்திருந்தார்.

பார்ப்பனன் வந்துவிட்டான்--மணத்தின்
பந்தலில் குந்திவிட்டான்.
'கூப்பிடும் மாப்பிள்ளையைப்--பெண்ணினைக்
கூப்பிடும்' என்றுரைத்தான்.
ஆர்ப்பாட்ட நேரத்திலே--ஐயகோ
ஆகாய வீதியிலே
போய்ப்பாடும் மங்கையுள்ளம்--கணக்கன்
பொன்னான மேனியினை!

கொட்டு முழக்கறியான்--கணக்கன்
குந்தி இருந்தகடை
விட்டுப் பெயர்ந்தறியான்--தனது
வீணை யுளத்தினிலே
கட்டிச் சருக்கரையைத்--தனது
கண்ணில் இருப்பவளை
இட்டுமிழற்று கின்றான்--தனதோர்
ஏழ்மையைத் தூற்றிடுவான்.

பெண்ணை அழைத்தார்கள்--மணமாப்
பிள்ளையைக் கூப்பிட்டனர்.
கண்ணில் ஒருமாற்றம்--பிள்ளைக்குக்
கருத்தில் ஏமாற்றம்
'பண்ணுவதாய் உரைத்தீர்--நகைகள்
பத்தும் வரவேண்டும்;
எண்ணுவதாய் உரைத்தீர்--தொகையும்
எண்ணிவைக்க வேண்டும்.'

என்றனன் மாப்பிள்ளை தான்--பெண்ணினர்
'இன்னும் சிலநாளில்
ஒன்றும் குறையாமல்--அனைத்தும்
உன்னிடம் ஒப்படைப்போம்.
இன்று நடத்திடுவாய்--மணத்தை'
என்று பகர்ந்தார்கள்.
'இன்று வரவேண்டும்--அதிலும்
இப்பொழு' தென்றுரைத்தான்.

'நல்ல மணத்தைமுடி--தொகையும்
நாளைக்கு வந்துவிடும்.
முல்லைச் சிரிப்புடையாள்--அழகு
முத்தை மணந்து கொள்வாய்.
சொல்லை இகழாதே'--எனவே
சொல்லியும் பார்த்தார்கள்.
'இல்லை, முடியாது--வரட்டும்'
என்று மறுத்துவிட்டான்.

மங்கையைப் பெற்றவனும்--தனது
வாயையும் நீட்டிவிட்டான்.
அங்கந்த மாப்பிள்ளையும்--வாலினை
அவிழ்த்து விட்டுவிட்டான்.
பொங்கும் சினத்திலே--வந்தவர்
போக நினைக்கையிலே
தங்கம் நிகர்த்தவளின்--அருமைத்
தந்தை உரைத்திடுவான்.

'இந்த மணவரையில்--மகளுக்
கிந்த நொடியினிலே,
எந்த வகையிலும்நான்--மணத்தை
இயற்றி வைத்திடுவேன்.
வந்துவிட்டேன் நொடியில்'--எனவே
வாசலை விட்டகன்றே
அந்தக் கணக்கனிடம்--நெருங்கி
'அன்பு மகளினை நீ

வந்து மணம்புரிவாய்'--என்றனன்
மறுத்துரைப் பானோ?
தந்த நறுங்கனியைக்--கணக்கன்
தள்ளி விடுவானோ?
முந்தை நறுந்தமிழைத்--தமிழன்
மூச்சென்று கொள்ளானோ?
அந்த நொடிதனிலே--கணக்கன்
ஆடி நடக்கலுற்றான்.

'ஆசைக் கொருமகளே--எனதோர்
அன்பில் முளைத்தவளே!
காசைக் கருதிவந்தான்--அவனோ
கண்ணாலத்தை மறுத்தான்.
காசைக் கருதுவதோ--அந்தக்
கணக்கனைக் கண்டு
பேசி மணம்முடிக்க--நினைத்துன்
பெற்றவர் சென்றுவிட்டார்.

ஏழைஎன் றெண்ணாதே--கணக்கன்
ஏற்ற அழகுடையான்.
தாழ இருப்பதுவும்--பிறகு
தன்தலை நீட்டுமன்றோ!
எழையென் றெண்ணாதே'--எனவே
ஈன்றவள் சொன்னவுடன்
ஏழெட்டு வார்த்தைகள் ஏன்?--'மாப்பிள்ளை
யார்?' என்று கேட்டனள்பெண்.

'அந்தக் கணக்கப்பிள்ளை'--எனவே
அன்னை விளக்கிவிட்டாள்.
குந்தி இருந்தமயில்--செவிகள்
குளிரக் கேட்டவுடன்
தொந்தோம் எனஎழுந்தே--தனது
தோகை விரித்தாடி
வந்த மகிழ்ச்சியினைக்--குறிக்க
வாயும் வராதிருந்தாள்.

அந்த மணவறையில்--உரைத்த
அந்த நொடியினிலே
அந்தக் கணக்கனுக்கும்--அவனின்
ஆசைமயில் தனக்கும்
கொந்தளிக்கும் மகிழ்ச்சி--நடுவில்
கொட்டு முழக்கிடையில்
வந்தவர் வாழ்த்துரையின்--நடுவில்
மணம் முடித்தார்கள்.

'சிங்கக் குழந்தைகளை--இனிய
செந்தமிழ்த் தொண்டர்களைப்
பொங்கும் மகிழ்ச்சியிலே--அங்கமே
பூரிக்க ஈன்றிடுக.
திங்களும் செங்கதிரும்--எனவே
செழிக்க நல்லாயுள்'
இங்கெழும் என்வாழ்த்து--மொழிகள்
எய்துக அவ்விருவர்!

காதல் நினைவுகள்-11

காதல் நினைவுகள்-11
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

11. எங்களிஷ்டம்
தென்றல் விளைந்தது, முல்லை மலர்ந்தது,
தீங்குரற் ப‡¢கள் பாடின.
குன்று நற்சோலை விநோத மலர்க்குலம்
கோலம் புரிந்தன எங்க ணும்.
நின்றிருந்தான் தனியாய் ஒரு வாலிபன்
நேரிலோர் தாமரைப் பூவிலே
அன்புறு காதலி யின்முகங் கண்டனன்;
ஆம்பலில் கண்டனன் அவள் விழி!

கோதை இடைதனைப் பூங்கொடி தன்னிலும்,
கோவைப் பழத்தினில் இதழையும்,
காதலன் கண்டனன்; கங்கைப் பெருக்கெனக்
காதற் பெருக்கிற் கிடந்தனன்!
சீதள மென்மலர் தன்முக மீதினில்
சில்லென வீழ்வது போலவே
காதலி அக்கணம் பின்புற மேவந்து
கண்களைப் பொத்தினள் செங்கையால்!

கையை விலக்கித் திரும்பினன் காதலன்
காதலி நிற்பது கண்டனன்!
துய்யவன் நெஞ்சும் உடம்பும் சிலிர்த்தன
சுந்தரி தன்சிரிப் பொன்றினால்!
கொய்மலர் மேனியை அள்ளிடுவான்; அவள்
கோபுரத் தோளில் அழுந்துவாள்!
செய்வது யாதுபின்? இன்பநற் கேணியிற்
சேர்ந்தனர் தம்மை மறந்தனர்!

காதலர் இவ்விதம் இங்கிருந்தார் இதைக்
கண்டனர் கேட்டனர் ஊரினர்!
'ஏதுவிடோம்' என அத்தனை பேர்களும்
எட்டி நடந்தனர் சோலைக் கே.
பாதி மனிதர்கள் கோபத்திலே தங்கள்
பற்களை மென்றனர் பற்களால்!
மீதிருந்தவர் கத்திநற் கேடயம்
வேலினைத் தூக்கி நடந்தனர்!

நின்றதோர் ஆல மரத்திடை வீழ்தினை
நேரிற் பிணைத்ததோர் ஊஞ்சலில்
குன்றுயர் தோளினன் வீற்றிருந்தான் அந்தக்
கோல நிலாமுகப் பெண்ணுடன்!
சென்றனர் கண்டனர் காதலர் தங்களைச்
சீறினர்! பாய்ந்தனர் சிற்சிலர்;
கொன்று கிடத்திட வேண்டுமென் றேசிலர்
கோலையும் வேலையும் தூக்கினர்.

'பொய்தவிர் காதல்' எனப்படும் காம்பினில்
பூத்த அப்பூக்கள் இரண்டையும்
கொய்து சிதைத்திட ஓடினர் சிற்சிலர்
குன்றிட வைதனர் சிற்சிலர்!
வையக மீதினில் தாலி யிழந்தவள்
மையல் அடைவது கூடுமோ?
துய்ய மணாளன் இறந்தபின் மற்றவன்
தொட்டதை வைதிகம் ஏற்குமோ?

என்றிவை கூறினர் ஊரினர் யாவரும்!
இங்கிவை கண்டனர் காதலர்.
குன்றினைப் போல நிமிர்ந்தனர்! கண்ஒளி
கூர்ந்தனர்! அச்சம் தவிர்ந்தனர்!
இன்றுள தேசம் புதுத்தேசம் மணம்
எங்களிஷ்டம் எனக் கூறியே
அன்னதோர் ஊஞ்சலை உந்தி உயர்ந்துயர்ந்
தாடினர்; ஊரினர் ஓடினர்!

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

காதல் நினைவுகள் -10

10. பிசைந்த தேன்
பெண்ணேபாராய், பெண்ணே பாராய்!
வெண்ணெயில் மாப்பிசைந்து, விரிந்த உள்ளங்கை
ஒன்று கீழுற, மற்றொன்று மேலுற
மாற்றி மாற்றி வடைதட்டி இட்டும்,
ஊற்றிய நெய்யில் 'ஒய்'என வேகுவதில்
இட்டவிழி எடாமலும், இருக்கும் ஓவியப்
பெண்ணே பாராய், பெண்ணே பாராய்!

இருவர்நாம் ஒன்றாய் இருந்து,நம் விழிநான்கு
காண, இரண்டு கருத்தும் கலந்தபடி
ஒரே நேரத்தில்நம் உயிர்இன் புறுவதை
விரும்புகின்றேன்! வீதியில் நடப்பது
கரும்பான காட்சி, காதுக்கு நறுந்தேன்!
தனித்திருந்து காண் என்று சாற்றிவிடாதே!
சன்னலண்டை என்னிடம், விரைவில்
பெண்ணே வாராய், பெண்ணே வாராய்!

பார்த்தனையோ என் பச்சை மயிலே?
'புதிதிற் பூத்த பூக்காடுதான் அது'!
நான் அதைப் பெண்ணென்று நவிலமாட்டேன்.
அக்காட்டின் நடுவில் 'அழகுடன் மணத்துடன்
செக்கச்செவேலெனச் செந்தாமரை' பார்!
அதை, அவள் வாய்என்று அறைய மாட்டேன்
அம்மலர் இரண்டிதழ் அவிழ்த்தது பார்நீ
நான் அதை உதடுஎன்று நவிலமாட்டேன்.

'இதழில் மொய்த்தன எண்ணிலா வண்டுகள்'
வீதியில் மக்களின் விழிகளோ அவைகள்?
அவ்விதழ் அசைந்தசைந் தசைந்து கனியடு,
பிசைந்ததேன் கேள் கேள் அதனை
இசையும் தமிழும் என்றால் ஒப்பேனே!

காதல் நினைவுகள்-9

9. காதல் இயற்கை
மறவன் சொல்லுகிறான்:

கண்ணிமையின் கடைக்கூட்டால் என்னைத் தட்டிக்
கனியிதழின் வண்ணத்தால் நெஞ்சை அள்ளி
மண்ணிடையே வாழ்வேனை உனது மையல்
மடுவினிலே தள்ளியபின் ஏடி மானே!
எண்ணிடையே ஏறாத பொய்மை வார்த்தை
ஏதேதோ சொல்லுகின்றாய் இதுவும் நன்றோ?
தண்ணிழலைத் தாவுகின்றேன்; சாதி பேதத்
தணலில்எனைத் தள்ளுகின்றாய் சகிப்ப துண்டோ?

குறவேந்தன் மகளடிநீ! அதனால் என்ன?
குறிஞ்சிநிலப் பெண்ணாதல் அப்பேர் இட்டார்!
மறவேந்தன் மகன்நான்தான்.வார்த்தை பேதம்
மாய்ப்பதுண்டோ நல்காதல் மகத்து வத்தை?
அறஞ்சொல்வார் இதைச்சொல்லி நமது வாழ்வை
அழிப்பர்எனில் அவ்வறத்தை அழிக்க வேண்டும்.
புறங்காண்போம் குள்ளர்சிலர் சொல்லும் பேச்சைப்
புனிதமடி ஒத்தஉளத் தெழுந்த காதல்.

* * * * *

குறத்தி சொல்லுகிறாள்:

கருமுகிலைப் பிளந்தெழுந்த மின்னும் வானும்
கைகலக்கும் போதுகல வாதே என்று
பெரும்புவியே நீசொன்னாய். ஐய கோஉன்
பேதமைக்கு நான் அஞ்சும் அச்சத் தாலே
அரும்புமிளம் பருவத்தான் ஆவி போன்றான்
அயர்கின்றான்;அயர்கின்றேன்.ஒன்று பட்டு
விரும்புகின்ற காதலினை மூடக் கொள்கை
வெட்டியதால் இருதுண்டாய் வீழ்ந்தோம் நாங்கள்!

உள்ளத்தில் உதித்தெழுந்த காதல் தீயில்
உடல்எரித்தல் யானறிவேன்; அறியார் மற்றோர்.
தள்ளத்தான் முடிவதுண்டோ அவன்மேல் ஆசை?
தணியாது போகுமெனில் உயிர்தான் உண்டோ?
அள்ளத்தான் போகின்றேன் அள்ளி அள்ளி
அருந்தத்தான் போகின்றேன் அவன்இன் பத்தை
துள்ளிப்பாய்ந் திடுநெஞ்சே! அந்தோ அந்தோ
துடுக்கடங்கி னாய்மூட வழக்கத் தாலே!

* * * * *

இயற்கை சொல்லுகிறது:

காதல்எனும் மாமலையில் ஏறி நின்றீர்
கடுமூட வழக்கத்துக் கஞ்ச லாமோ?
ஈதென்ன வேடிக்கை! சிரிப்பு வந்தென்
இதழ்கிழித்தல் கண்டீரோ காதல் மக்காள்!

குறத்தி சொல்லுகிறாள்:

மோதவரும் ஆணழகே வா வா வா வா!
முத்தம்வை இன்னொன்று; வைஇன் னொன்று!

மறவன் சொல்லுகிறான்:

மாதரசி கனியிதழோ தேனோ--சாதி
வழக்கழிக; இயற்கைத்தாய் வாழ்க நன்றே!

காதல் நினைவுகள் -8

8. அவளை மறந்துவிடு
மறந்துபோ நெஞ்சே அந்த
வஞ்சியை நினைக்க வேண்டாம்
'இறந்துபோ' என்றே என்னை
இவ்விடம் தனியே விட்டாள்!
பறந்துபோ இரவே என்றேன்
எருமையா பறந்து போகும்?
உறங்கவே இல்லை கண்கள்
ஒட்டாரம் என்ன சொல்வேன்?

மருந்துகேள்! அவளை நெஞ்சே
'மறந்துபோ' துன்பம் இல்லை!
இருந்தொன்றை நினைப்பேன்; அந்த
ஏந்திழை குறுக்கில் தோன்றி
அருந்தென்பாள் கனியுதட்டை
அவள் அங்கே இருந்தால் தானே?
வரும்தென்றல்! தொடுவாள் என்னை,
மலர்மேனி இருந்தால் தானே?

பாலோடு சீனி யிட்டுப்
பருகுவேன் அங்குத் தோன்றி
மேலோடு வார்த்தை சொல்லி
விரைவோடு மறைந்து போவாள்!
சேல்ஓடும் போது பின்னே
சிச்சிலி விழிகள் ஓடல்
போலோடி ஏன் அவள்பால்
பொருந்தினை? மறப்பாய் நெஞ்சே!

ஏட்டினில் கவிதை தன்னில்
இவளைத்தான் காணு கின்றேன்.
கூட்டினிற் கிளியும் வானில்
குளிரிளம் பிறையும் என்றன்
வீட்டினில் திருவி ளக்கும்
அவளெழில் விளக்கல் அன்றிக்
காட்டவே இல்லை என்றன்
கவலைக்கு மருந்து நெஞ்சே!

எனைக்கண்ட தோழன் காதில்
ஏந்திழை பிரிந்த துன்பம்
தனைச்சொன்னேன். அந்தத் தீயோன்,
தையலாள் வரும் வரைக்கும்
நினக்குயிர் வேண்டும்; அன்னாள்
நினைவினால் வாழ்க என்றான்.
எனக்கது சரிப்ப டாது
மறந்துபோ எனது நெஞ்சே!

காதல் நினைவுகள்-7

7. அவள்மேற் பழி
'கைப்பிடியில் கூட்டிவரக்
கட்டளையிட்டாள்' என நீ
செப்புகின்றாய் வாழியவே வாழி-- 'நான்
ஒப்பவில்லை' என்றுரைப்பாய் தோழி!

தேரடியில் கண்ட அவள்
தேனிதழைத் தந்தவுடன்
'ஊருக்கெனைக் கூட்டிச்செல்க' என்றாள்--தன்னை
யாருக்குமுன் வாக்களித் திருந்தாள்?

சோலையிலே வஞ்சியினைத்
தொட்டிடுமுன் சேல் விழியாள்
நாலுதரம் சுற்றுமுற்றும் பார்த்தாள்--எந்தக்
காலிக்கவள் அஞ்சிமுகம் வேர்த்தாள்?

கோட்டைவழி என்னை வரக்
கூறி அவள் நான் வருமுன்
பாட்டையிலே ஏன் தனித்து நின்றாள்?--எனைக்
கூட்டிவரப் பசப்பு கின்றாள்?

வல்லியினை முத்த மிட்டேன்
வாய்த்த என்றன் மேனியினை
மெல்லஅவள் ஏன்தடவ வேண்டும்?--வேறு
நல்லஉடலோ அவட்கு வேண்டும்?

'புன்னகையும் பூப்பதில்லை!
புதுமலரும் தீண்டவில்லை;
என்நினைவால் வாடுகின்றாள்' என்றாய்-- அன்று
சன்னலிலே யாருக்காக நின்றாள்?

'தொத்துகிளி யாள் எனது
தோளின் மிசை வந்திருக்கப்
பித்துமிகுந் தாள்' என மொழிந்தாய்--அவள்
இத்தெருவில் யாருக்காக வந்தாள்?

'ஆடுமயில் என் உளத்தை
ஆடரங்கம் ஆக்கிவிட
நாடிநலிந்தாள்' எனச்சொல் கின்றாய்--அவள்
மாடியிலே ஏன்ஒருநாள் நின்றாள்?

காதல் நினைவுகள்-6

6. சொல்லித்தானா தெரியவேண்டும்
தாயிருக்கையில் தனமிருக்கையில்
சஞ்சல மென்ன மானே--நல்ல
பாயிருக்கையில் புழுதித் தரையில்
படுத்துப் புரளும் தேனே!
வாயிருக்கையில் கேளடி நல்ல
வான நிலவும் கொடுப்பேன்--இன்று
நீயிருக்கிற நிலை சகியேன்
நிலத்தினில் உயிர் விடுப்பேன்.


என்ன குறைச்சல்? எதனில் தாழ்த்தி?
யானை போல அப்பா--நீ
சொன்ன நொடியில் குறை தவிர்ப்பார்!
சொல்லுவதும் தப்பா?
சின்ன இடுப்பு நெளிவ தென்ன
சித்திரப் புழுப் போலே--அடி
கன்னி உனக்குக் கசந்ததுவோ
காய்ச்சிய பசும் பாலே?


அண்ணன்மார்கள் பாண்டியர்கள்
ஆசைக் கொரு தம்பி-- அவன்
எண்ண மெல்லாம் உன்னிடத்தில்!
ஏற்ற தங்கக் கம்பி.
தண்ணென் றிருந்த உனது மேனி
தணல் படுவது விந்தை-- உன்
கண்ணில் கண்ட அத்தானுக்குக்
கலங்கியதோ சிந்தை!

காதல் நினைவுகள்-5

5. இன்னும் அவள் வரவில்லை
மங்கையவள் வீட்டினிலே கூடத்துச் சுவரில்
மணிப்பொறியின் இருமுள்ளும் பிழைசெயுமோ! மேற்கில்
தங்கத்தை உருக்கிவிட்ட வான்கடலில் பரிதி
தலைமூழ்க மறந்தானோ! இருள்என்னும் யானை
செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவர விலையோ!
சிறுபுட்கள் இன்னும்ஏன் திரிந்தனவான் வெளியில்!
திங்கள்முகம் இருள்வானில் மிதக்கஅவள் ஆம்பற்
செவ்வாயின் இதழளிக்க இன்னும் வர விலையே!

மணியசையக் கழுத்தசைக்கும் மாடுகளும் இன்னும்
வயல்விட்டு வீட்டுக்கு வந்தபா டில்லை.
துணியுலர்த்தி ஏகாலி வீடுநுழைந் திட்டால்
தொலையாத மாலைதான் தொலைந்துபோ மன்றோ!
அணியிரவும் துங்கிற்றோ காலொடிந்த துண்டோ;
அன்றுபோல் இன்றைக்கேன் விரைந்துவர வில்லை!
பிணிபோக்கும் கடைவிழியாள் குறுநகைப்பும் செய்தே
பேரின்பம் எனக்கருள இன்னும்வர விலையே!

முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி
முன்னடியும் பெயர்க்காமல் இன்னும்இருக் கின்ற
பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை?
பூங்கொடியாள் வருவதாம் நேற்றெனக்குச் சொன்ன
நல்லஇரா வருவதற்கு வழிதானோ இல்லை?
நானின்பம் எய்துவதில் யாருக்குத் துன்பம்?
சொல்லைத் தேன் ஆக்கிஎனை அத்தான் என்றள்ளிச்
சுவைக்கடலில் தள்ளஅவள் இன்னும்வர விலையே!

பெருமக்கள் கலாம்விளைக்கும் மாலைமறைந் திட்ட
பிறகுவரும் நள்ளிரவு! யாவருமே துயில்வார்!
திருமிக்காள் தன்வீட்டுப் படிஇறங்கும் போதில்
சிலம்பொலியும் இவ்விடத்தில் கேட்டிடும்என் காதில்!
உருமிக்க பெரும்புறத்துக் கரும்பாம்பின் தீய
ஒளிமாலை விழிஇன்னும் மூடாத தேனோ!
புருவத்து வில்எரியும் நீலமலர் விழியாள்
புத்தமுதம் எனக்குதவ இன்னும்வர விலையே!

சிற்றுளிக்கும் பிளவுபடா வல்இரும்பு போல்வாள்
தேனூற எனைநோக்கி வாய்மலர்ந்து நின்றே
நற்றுளிகள் அமுதமுதாய் நன்கருள்செய் திட்டாள்
நள்ளிரவில் அத்தானே நான்வருவேன் என்றே!
வெற்றொளியும் வெறுந்தொழிலும் மிகும்மாலை என்னும்
விழல்மடிய இருளருவி எப்போது பாயும்?
பொற்றொடியாள் எனைத்தழுவித் தழுவிநனி இன்பம்
புதிதுபுதி தாய்நல்க இன்னும்வர விலையே!

மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்தும்
வெந்துநீ றாகாமல் இருப்பதொரு வியப்பே!
நாற்றிசையும் பெருகிவரும் இருட்பெருவெள் ளத்தை
நடுவிருந்து தடுக்கின்றான் பரிதி; அவன் செய்கை
மாற்றியமைத் திடஏதும் வழியுண்டோ? என்றன்
மையலினை நான்பொறுக்க ஒருவழியுங் காணேன்.
சேற்றிற்செந் தாமரையாம் இரவில்அவள் தோற்றம்!
தீயில்எனைக் குளிர்செய்ய இன்னும்வர விலையே!

காதல் நினைவுகள்-4

4. காதலி காதலனுக்கு
"பறப்பதற்குச் சிறகில்லை"

*

காதல,
நான் பிழைசெய்தேன்; என் ஆசை
உன்மனத்தில் கழிந்ததென்று
கருதினேன்! கடிதத்தைக் கண்டவுடன்
களிப்புற்றேன்! களிப்பின் பின்போ
வாதையுற்றேன்! பறப்பதற்குச் சிறகில்லை!
காற்றைப்போல் வந்தே னில்லை
வனிதைஇங்கே-நீஅங்கே! இடையில்இரு
காதங்கள் வாய்த்த தூரம் !
சாதலுக்குக் காரணம்நான் ஆகேன்
என் சாகாமருந்தே! செங்கை
தாங்கென்னை; உன்றன்நெடும் புயத்தினில்நான்
வீழ்வதற்குத் தாவு கின்றேன்.
நீதூரம் இருக்கின்றாய் ஓகோகோ
நினைப்பிழந்தேன் என் துரையே!
நிறைகாதல் உற்றவரின் கதியிதுவோ!
என்செய்கேன் நீணிலத்தே!

காதல் நினைவுகள்-3

3. காதலன் காதலிக்கு
"பறந்து வா!"

*
காதலியே,
என்விழிஉன் கட்டழகைப்
பிரிந்ததுண்டு! கவிதைஊற்றிக்
கனிந்ததமிழ் வீணைமொழி என்செவிகள்
பிரிந்ததுண்டு! கற்கண்டான
மாதுனது கனியிதழைப் பிரிந்ததுண்டென்
அள்ளூறும் வாய்தான்! ஏடி

மயிலே,
உன்உடலான மலர்மாலை
பிரிந்ததுண்டென் மார்பகந்தான்!
ஆதலின்என் ஐம்பொறிக்கும் செயலில்லை;
மீதமுள்ள ஆவி ஒன்றே
அவதியினாற் சிறுகூண்டிற் பெரும்பறவை
ஆயிற்றே! "அன்பு செய்தோன்
சாதல்அடைந்தான்" எனும்ஓர் இலக்கியத்தை
உலகுக்குத் தந்திடாதே!
சடுதியில்வா! பறந்துவா! தகதகென
முகம்காட்டு! தையலாளே!

காதல் நினைவுகள்-2

2. காதலற்ற பெட்டகம்

உள்ளம் உருக்கி, உயிர் உருக்கி, மேல்வியர்வை
வெள்ளம் பெருக்கியே மேனிதனைப் பொசுக்கி
ஓடையின் ஓரம் உயர்சோலைக்குள் என்னைக்
கோடை துரத்திடநான் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

* * * * * *

பட்டுவிரித்த பசும்புல்லின் ஆசனமும்
தொட்டுமெது வாய்வருடத் தோய்தென்றல் தோழியும்
போந்து விசிறஒரு புன்னைப் பணிப்பெண்ணும்
சாந்து மகரந்தம் சாரும் நறுமலர்த்தேன்,
தீங்கனிகள், சங்கீதம் ஆன திருவெல்லாம்
ஆங்கு நிறைந்திருக்கும் ஆலின்நெடு மாளிகையில்!

* * * * * * *

கொட்டும் அனற்கோடைக் கொடும்பகைமை வெற்றிபெற்றுப்
பட்டத் தரசாக வீற்றிருந்த பாங்கினிலே
கொஞ்சம் உலவிவரும் கொள்கையினால் தென்னையிலே
அஞ்சுகம் வாழ்த்துரைக்க அன்னம் வழிகாட்டத்
தேய்ந்த வழிநடந்தேன்!-காதல் திருவுருவம்!
ஒன்றி உளத்தை உறிஞ்சிவிட அப்படியே
நின்றேன் வனிதை நெடுமாதுளை அருகில்!
தீங்குசெயும் மேலாடை யின்றித் திரண்டுருண்ட
தீங்கனியிரண்டு தெரிய இருக்கு மெழில்
மாதுளையே, கேளாய் மலர்ச்சோலை நீ, நான்தான்.
வாதுண்டோ என்றேன். மலர்க்கண் சிவந்துவிட்டாள்!
பிள்ளைமான் ஓடிப் பெருமாட்டி மாதுளைமேல்
துள்ளிவிழுந்து சுவைத்த சுவைக் கிடையில்
தாயன்புப் பெட்டகத்தில் தாங்காத காதலுக்கு
மாயமருந் தில்லை எனுங்கருத்து வாய்த்ததுவாம்.
மாதுளமும் அங்கு வருஷிக்கும் பேரன்பும்
தீதின்றி வாழ்க செழித்து!

காதல் நினைவுகள்- 1

1. ஆடுகின்றாள்

கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த
புலையுலகம் போக்கினேன். போக்கிக்--கலையுலகம்
சென்றேன்;மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள்
நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு.

விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின்
வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்--சுழிந்தோடிக்
கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என்
மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து.

சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும்.வானில்
மிதக்கும்அவள் தாமரைக்கை. மேலும்--வதங்கலிலாச்
சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல்,
கண்கவரும் செம்பவளக் காம்பு.

செந்தமிழை நல்லிசையைத் தேன்மழையை வானுக்குத்
தந்தோம்என் னும்தாள மத்தளங்கள்--பந்தியாய்
இன்னஇடம் இன்னபொருள் என்றுணர்த்தும் அன்னவளின்
வன்னஇடை வஞ்சிக் கொடி.

கோவை உதட்டை ஒளிதழுவும்.அவ்வொளியில்
பாவைதன் உள்ளத்தின் பாங்கிருக்கும்--தாவும்அதைக்
கண்ணாற் பதஞ்செய்து கையோடு நற்கலையைப்
பண்ணால் உயிரில்வைத்தாள் பார்.

இளமை, அழகு, சுவைகொள்இசை, என்னும்
களமெழுந்த நாட்டியத்தைக் கண்டேன்--உளமார
நானெந்தத் துன்பமுமே நண்ணுகிலேன் பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமா னேன்.

இன்றைய விவசாயத்திற்கு என்ன தேவை?

இன்றைய விவசாயத்திற்கு என்ன தேவை?

நான் விவசாய குடும்பத்தை சார்ந்தவன்.என்னுடைய அப்பா ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.தற்போது விவசாயத்தை செய்து வருகின்றார்.விவசாயத்தை லாபகரமான தொழில் என கூறமுடியாது.எத்தனையோ பேர் விவசாயம் வேண்டாம் ஒரு கடை வைத்து நடத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்தனர்.நான் கூட இன்டர்நெட் சென்டர் வைத்துக் கொள்ளுங்கள் என்றேன்.

எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டார்.காரணம் கேட்டதற்கு இது தான் தனக்கு திருப்தியாக இருப்பதார் கூறினார்.அதிலிருந்து எனக்கும் விவசாயத்தின் மீது அதிக பற்று ஏற்பட்டுவிட்டது.

சென்ற மகா சிவராத்திரிக்கு வைரசெட்டிபாளையத்திற்கு சென்றோம்.இரவை பெரியசாமி கோவிலில் கழித்துவிட்டு மறுநாள் காலை கொல்லிமலையிலுள்ள ஆழுக்கு சென்றோம்.அங்கு வழி நெடுகிலும் சீரக சம்பா என்னும் நெல் விளைந்திருந்தது.இது அருவடைக் காலம் என்பதால் அனைவரின் வயலிலும் ஒரு எந்திரம் அருவடை செய்து கொண்டிருந்தது.நான் முன்பே இதைப் போன்றதைப் பார்த்திருக்கின்றேன்.ஆனால் இப்படி ஐந்தாறு வண்டிகள் வேலை செய்வதைப் பார்த்ததில்லை.ஆர்வம் கொண்டு விசாரித்தால் அங்கு பயிரிட்டிருந்த்தெல்லாம் பெரு விவசாயிகள்.இன்றைய ஆள் பற்றாக்குறைகளை சரிசெய்ய இதுபோல் இயந்திரங்கள் மட்டுமே மாற்றுவழி என்பது ஒரு மறுக்க முடியாத செய்தி.

பெரு விவசாயிகளால் மட்டுமே இந்த இயந்திரங்களை பயண்படுத்த இயலும் காரணம் பொருளாதாரம்.சிறுவிவசாயிகள் இந்த இயந்திரத்திற்கு கொடுக்கும் விலையில் பாதியைக்கூட மீட்க முடியாது.இந்தியாவில் சிறுவிவசாயிகள் அதிகம்.ஆள் பற்றாக்குறை,லாபகரமாக இயங்காத விவசாயம்,நாளுக்கு நாள் ஏறிப்போகும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை என பல தொல்லைகள் இருந்தால்,அதற்கு மேல் வந்து நிற்கின்றது அரசாங்கத்திடம் வாங்கிய கடன்.

பெரு விவசாயிகளால் மட்டும் பயண்படுத்த முடிகின்ற இயந்திரங்களை சிறு விவசாயிகள் பயன்படுத்த ஒற்றுமை ஒன்று மட்டும் போதும்.எப்படி என்று கேட்கிரீகளா.பதில் மிகவும் சுலபமானது.இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் சிறுவிவசாயிகள் ஒன்றாக இனைய வேண்டும்.இதனால் சிதறிக் கிடக்கின்ற பூமியானது ஒன்றுபடும்.ஐம்பது நூறு என மொத்தமாக இருக்கும் நிலத்தில் பாகுபாடில்லாமல் அனைவரும உழைக்க வேண்டும்.ஒரே நிர்வாக்த்தின் கீழிருப்பதால் விளைச்சல் அதிகரிக்கும்.இயந்திரங்களை பயண்படுத்துவது எளிதாகவும்,முறையாகவும் போய்விடும்.அதைவிட சிறு விவசாயிகள் பொருட்களை அழகாக ஏற்றுமதியும் செய்ய முடியும்.

படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவேண்டும்.உலகின் முதல் தொழிலை மரியாதை செய்து காக்கவில்லையென்றால் நம்முடைய நிலை என்னவாகுமென கணிக்க முடியாது.

சனி, 4 ஏப்ரல், 2009

மல்லதாசனின் மகிமை

சிவராத்திரி கதைகள்

மல்லதாசனின் மகிமை

மல்லதாசன் என்றோரு சிவனடியார்.தினமும் சிவனுக்கு பூஜை செய்து கும்பிடாமல் சாப்பிடமாட்டார்.ஒரு நாள் வியாபார விஷயமாக மைத்துனரை அழைத்துக் கொண்டப வெளியூர் சென்றார்.அன்று சிவராத்திரி.பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டார் என்பது மைத்துனனுக்கு தெரியும்.இரவு ஆனது.அவனுக்கு அகோரப் பசி.தானியம் அளக்க உதவும் படி ஒன்றை எடுத்துச் சென்று ஒரு புதரில் கவிழ்த்து வைத்துவிட்டு வந்தான்.மாமா அங்கே ஒரு புதரில் சிவலிங்கம் இருக்கிறது.தரிசனம் செய்து வரலாமா என்று அழைத்தான்.

அவரும் ஆனந்தமாக கிளம்பினார்.இருட்டில் படியை வலம் வந்து வணங்கிவிட்டு திரும்பினார்.திருப்தியுடன் சாப்பிட்டார்.வயிறு முட்ட சாப்பிட்ட மைத்துனன், ஐயோ மாமா நான் சும்மா கவிழ்த்து வைத்த படியை சிவலிங்கம் என்று நினைத்து விழுந்து வணங்கினீர்கள்.நன்றாக ஏமாந்து விட்டீர்கள் என கிண்டல் செய்தான்.

மூடனே நான் வணங்கியது சிவலிங்கத்தை தான் என்றார் மல்லதாசன்.கடகடவெனச் சிரித்த மைத்துனன்,சரி வாருங்கள் யார் சொல்வது சரியென பார்த்துவருவோம் என்று கிளம்பினான்.அங்கு சென்று பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி புதரே ஆலமரமாகவும் அதனுள் அவன் கவிழ்த்து வைத்த படியே அழகிய சிவலிங்கமாகவும் காட்சியளித்தது.பிரம்மித்துப் போனான்.

உண்மையான அடியவர்களுக்கு சிவபெருமான் எந்த பொருளிலும் காட்சி கொடுப்பார்.இனி இப்படி விளையாடாதே என்றார் மல்லதாசன்.

அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான் மைத்துனன்.

புதன், 1 ஏப்ரல், 2009

விநாயகரின் திருவுருவங்களும் என் சிந்தனையும்

அன்பானவர்களே,

மிக சமீபத்தில் பத்திரிக்கையாளர் சுதாங்கனின் வலைதளத்தில் விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்? என்ற கட்டூரையைப் படித்தேன்.மிகவும் எளிமையான எழுத்துகளில் விநாயகனின் வடிவங்களைப் பற்றி எழுதியிருந்தார்.அதைப்படித்து வியப்படைந்தேன்.மேலும் சில சிந்தனைகள் மனதினுள் எழுந்தது,அதன் விளைவே இந்தக் கட்டூரை.

விநாயகனின் ஐந்து கைகளுக்கு விளக்கமாக பஞ்ச பூதங்களின் சக்தியையும்.அவற்றின் செயல்களாக ஒரு கை தனக்கும்,ஒரு கை தேவர்களுக்கும், ஒரு கை பெற்றோர்களுக்கும்,இரு கைகள் நம்மைக் காக்கவும் என்று கச்சியப்ப முனிவர் கூறியதை முன்வைக்கின்றார். விநாயகனுக்கு எட்டு அவதாரங்களையும்,முப்பத்திரண்டு திருவுருவங்களையும் அதன் பிறகு விரிவாகச் சொல்லுகிறார்.முப்பத்திரெண்டு திருவுருவங்கள்:
1.ஸ்ரீபால விநாயகர்
2.ஸ்ரீ தருண விநாயகர்
3.ஸ்ரீ பக்தி விநாயகர்
4.ஸ்ரீ வீர விநாயகர்
5.ஸ்ரீ சக்தி விநாயகர்
6.ஸ்ரீ துவிஜ விநாயகர்
7.ஸ்ரீ சித்தி விநாயகர்
8.ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்
9.ஸ்ரீ ஷிப்ர விநாயகர்
10.ஸ்ரீ விக்ன விநாயகர்
11.ஸ்ரீ ஹரம்ப விநாயகர்
12.ஸ்ரீ லட்சுமி விநாயகர்
13.ஸ்ரீ மகர விநாயகர்
14.ஸ்ரீ விஜய விநாயகர்
15.ஸ்ரீ நிருத்திய விநாயகர்
16.ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்
17.ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்
18.ஸ்ரீ வரத விநாயகர்
19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்
20.ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்
21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்
22.ஸ்ரீ ஏகதந்த விநாயகர்
23.ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்
24.ஸ்ரீ உத்தண்ட விநாயகர்
25.ஸ்ரீ ருணமோகன விநாயகர்
26,ஸ்ரீ துண்டி விநாயகர்
27.ஸ்ரீ இருமுக விநாயகர்
28.ஸ்ரீ திரிமுக விநாயகர்
29.ஸ்ரீ சிங்க விநாயகர்
30.ஸ்ரீ யோக விநாயகர்
31.ஸ்ரீ துர்க்கா கணபதி
32.ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்

முப்பத்தியிரண்டு திருவுருவங்களின் பெயர்களை மட்டும் இங்கு கொடுத்திருக்கிறேன்.அவருடைய கட்டூரையில் இந்த திருவுருவங்களின் அமைப்புகளையும் கூறியிருக்கிறார்.அவருடைய கட்டூரையை படிக்க விரும்புகிறவர்கள் http://sudhanganin.blogspot.com/2008/09/blog-post.html க்கு சென்று படியுங்கள்.

என்னுடைய ஆச்சிரியம் என்னவென்றால் விநாயகர் என்னுடைய இஷ்ட தெய்வம்.அப்படியிருக்கும் போது அவருடைய அவதாரங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டதுக் கூட இல்லை.இந்த இஷ்டதெய்வ வழிபாடு இந்து மதத்தில் இருக்கும் சிறப்புகளில் ஒன்று.தங்களுக்கு பிடித்த தெய்வத்தை வழிபட இந்து மதம் அனுமதி தருகின்றது.இது போன்ற சுகந்திரங்கள் தான் இந்து மதத்தினை பல காலம் அழியாமல் காத்துக்கொண்டிருக்கிறது.

தொலைக்காட்சி,பத்திரிக்கை,சிற்றிதல்கள் என எல்லா ஊடகங்களிலும் ராமாயணமும்,மகாபாரதமும் மட்டுமே இடம் பிடிக்கின்றன.மற்ற கதைகளையோ,புராணங்களையோ அவைகள் மறந்து விடுகின்றன.சொன்ன கதைகளையே அவர்கள் சொல்வதும் அதையும் நாம் சலிக்காமல் மீண்டும் மீண்டும் படிப்பதும்,பார்ப்பதுமே வாடிக்கையாகிவிட்டது.இந்த அவலம் கண்டிப்பாக மாற வேண்டும்.அதற்கான சில முயற்சிகளை நானும் எடுக்கிறேன்.எந்த மாற்றமானாலும் அதை நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.

கதைகளைத் தேடுவோம் கொட்டிக் கிடக்கும் புதையல்களிலிருந்து ராமாயணம்,மகாபாரதம் என்னும் இரண்டு முத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமா.மாணிக்கங்களையும்,வைரங்களையும் விட்டு சென்று விட முடியுமா.கொஞ்ச காலம் ராமாயணத்தையும்,மகாபாரத்தையும் மறப்போம்.அப்போது தான் புதிய கதைகள் கிடைக்கும்.வாருங்கள் அன்பானவர்களே நம் தேடுதல் வேட்டையை இன்றையிலிருந்து தொடங்குவோம்.