தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

புதன், 28 ஏப்ரல், 2010

மாதா அமிர்தானந்த மயி சிந்தனைகள்




யாரையும் புகழ வேண்டாம்

* பிறரிடம் கூறி உங்களது கவலைகளைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள். கூறுவது என்று முடிவெடுத்தால் கடவுளிடம் மட்டும் கூறுங்கள். நம் கவலைகளை சர்வேஸ்வரனிடம் சொல்லி முறையிட்டால் நிச்சயம் வழி கிடைக்கும்.

* நான் ஒன்றுமே செய்யவில்லை. எல்லாவற்றையும் இறைவனே செய்கிறார் என்ற உறுதியான உணர்வு கொண்டவன் எந்த இடத்திலும் தவறு செய்ய வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவன் எல்லா இடத்திலும் ஆண்டவனையே பார்க்கிறான்.

* நான் செய்கிறேன் என்ற எண்ணம் கொண்டவன் தான் செய்யும் நல்ல, தீய செயல்களுக்குப் பொறுப்பாளியாகிறான். அவனுக்கு எல்லாச் செயல்களையும் கடவுள் செய்விக்கிறார் என்ற எண்ணம் உண்டாவதில்லை.

* எச்செயலையும் இறைவனுக்கு அர்ப்பணமாக்கி செய்யத் தொடங்கினால் அச்செயல் புனிதமாகி விடும். சாப்பிடுவதாக இருந்தாலும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்த பின்பே சாப்பிடும் போது உணவு புனிதமாகி விடுகிறது.

* ஆன்மிக வாழ்வின் நோக்கமே நமக்கு சொந்தமில்லாதவற்றை உதறி விடுவதாகும். இதைத் தான் துறத்தல் என்று குறிப்பிடுகிறார்கள். நமக்கு சொந்தமான கடவுளை மட்டும் பற்றி நிற்பதே உண்மையான ஆன்மிக நிலைப்பாடாகும்.

* யாரையும் புகழ வேண்டாம்.புகழ்ச்சியை விரும்பவும் வேண்டாம். புகழை விரும்பினால் நம்மை அறியாமலேயே அகங்காரம் வளர்ந்து விடும். என்றும் ஒரே நிலையில் இருக்கும் கடவுளைத் தவிர வேறு யாரையும் புகழக்கூடாது.


உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள்


* காற்றை நீங்கள் கண்ணால் காண முடியவில்லை என்பதால் காற்றே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இறைவனை நேரில் காண முடியாவிட்டால் இறைவனே இல்லை என்றாகிவிடுமா?

* சூரிய ஒளியின் சக்தியை ஒரு பூதக்கண்ணாடி வழியே ஒளிக்கிரணத்தை செலுத்துவதன் மூலம் அறியலாம். மனதை ஒருமுகப்படுத்தினால் தியானத்தில் இறைவனின் ஆற்றல் வெளிப்படும்.

* உங்களுடைய ஆத்மாவைக் காண விரும்பினால் வெளியே தேடக்கூடாது. உள்ளேதான் பார்வையைத் திருப்ப வேண்டும். இறைவனைத் தேடி எத்தனை தூரம் போவீர்கள், அவன் உங்களுக்குள் ஒளிவிடுவதைக் கண்டு கொள்ளாமல்.

* மூன்றாவது மாடியிலுள்ள அலுவலகத்தை அடைவது உங்கள் நோக்கம். அதற்கு லிப்டை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறீர்கள்.

அதுபோல, அரூபமான இறைவனை அடைய உருவங்களையும், பெயரில்லாதவனை அடைய பெயர்களையும் பயன்படுத்துகிறோம்.

* ஒருவர் சரசரவென்று நேரடியாக மரத்தில் ஏறி மாங்காய் பறித்து விடுகிறார். இன்னொருவருக்கு துறட்டு தேவைப்படுகிறது. வேறொருவருக்கு ஏணி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று, ஞானிகள் இறைவனுடன் நேரடித் தொடர்புடையவர்கள்; நாமோ இறைவனை படிப்படியாய் முயன்று அடைகிறவர்கள். அவரவர் பக்குவத்துக்கேற்ப சாதனம் தேவைப்படும்.

* நம் உறவினரின் புகைப்படத்தைப் பார்க்கும் போது, அவரையே நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. ''படத்தை ரொம்ப அருமையா எடுத்திருக்கிறார் போட்டோகிராபர்,'' என்போம். அதற்குமேல் போட்டோகிராபரோ, கேமரா நுணுக்கமோ நம் நினைவுக்கு வராது. அதுபோல் தான் இறைவனின் நற்குணங்கள் தெரியும். அவனை ஆராய வேண்டுமென்றால் முடியாது.