தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வியாழன், 29 அக்டோபர், 2009

தானம் – ஒரு பக்க சிறுகதை

தானம் – ஒரு பக்க சிறுகதை
தன்னுடைய பிறந்த நாளில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பதினை வழக்கமாக கொண்டிருந்தார் பெரிய பண்ணை முதலாளி ருத்திரன்.இந்த முறை அவருக்கு திருமணம் வேறு முடிந்துவிட்டதால் இன்னும் சிறப்பாக செய்யலாம் என்பது அவர் எண்ணம்.அதன் ஏற்பாடுகளை கணக்குப் பிள்ளையிடம் செய்யச் சொல்லி உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவர் புது மனைவி கல்பனா குறுக்கிட்டாள்.

“மாமா நான் ஒரு கருத்து சொல்லட்டுமா”

“சொல்லுபுள்ள, எதை பத்தி கருத்து சொல்ல வாரவ?”

“இந்த வாட்டி கோவிலுள்ள அன்னதானம் செய்ய வேணாம்”

“காலங்காலமா செஞ்சுட்டு வர்ர வழக்கத்த ஏன்புள்ள வேணாங்குற?.சாமி மேல ஏதாவுது கோபமா”

“அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா, கோவிலுள்ள வைச்ச செஞ்சா நல்ல வசதியுள்ள மனுசன்களும் சாமிபிரசாதமுன்னு வாங்கிசாப்பிட்டுப் புட்டு போயிடறா. மத்த மதத்துக்கார ஏழை சனங்களும் சாப்பிட வரதுக்கு தயங்குதுங்க.நான் எங்கருத்த சொல்லிப்புட்டேன்.ஏத்துக்கிரதோ ஏத்துக்காத்தோ உங்க இஸ்டம்”. ருத்திரன் என்ன செய்வதென்று யோசிக்கும் முன்பே.

“எஜமானி அம்மா சொல்லது நூத்துக்கு நூறு உண்மைதானுங்க” என்றவாறு கணக்கு பிள்ளையும் தாளம் போட்டார்.

“சரி கணக்கு, ஒரு பெரிய கல்யாண மண்டபத்தை பதிவு பண்ணீரு. இந்த தடவ எம் சம்சாரம் சொன்னபடி செஞ்சி பாத்திடுவோம்.”

தன் முதல் திட்டம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில், அப்படியே இரண்டு மூன்று பேனர் கட்டவுட்டுகளை வைத்துவிட்டால், பின்னால் கிராம தலைவர் தேர்தலுக்கு அவரை நிறுத்த வசதியாக இருக்கும் என்று மனதிற்குள் கணக்குளை போட்டுக் கொண்டிருந்தாள் கல்பனா.