தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

திங்கள், 10 மே, 2010

தயவுக் குறள் - சுவாமி சரவணானந்தா

கொல்லாமையை உலகிற்கே உணர்த்துகின்ற சைவ நெறியில், தயவின் பெருமையை உறைக்க சுவாமி சரவணானந்தா இயற்றிய தயவுக் குறள் இங்கே....முதல் அதிகாரம் - தயா நெறி


1.

தயாமூல தன்மநெறி தானோங்க ஓங்கும்
நியாயநிறை யின்பம் நிலைத்து

குறிப்பு விளக்கம்.

தயவு மூலமாகத்தான் மனித சமூகம் ஒன்றுபட்டு வாழ்ந்து பேரின்ப நிலை அடைய வேண்டியுள்ளது. அன்பும், அறிவும் நிரம்பிய உள்ளுணர்வு தான் இங்கு தயவாகக் குறிக்கப்படுகின்றது. இத் தயவு நெறி தானே, சுத்த சன்மார்க்கமாக யாவரும் உரிமையோடு ஏற்று வாழ்ந்து இன்புறலாகும்.

எல்லாம் வல்ல தயாபெரும் சக்தியை, தயாபரன். தயாசாகரன், தயாமூல பண்டாரம் முதலான கடவுள் தத்துவப் பெயர்களால் குறிக்கலாகும். இப் பதியின் உண்மையை அறிந்து அடைதற்குச் சுத்த தயவு ஒன்றே உண்மை வழி என்று அறிந்து கொள்ளலாகும்.

தயா வாழ்வினால் வரும் இன்பம் ஒன்றே உண்மையான. நியாயமான இன்பம். இதுவே நிலைத்து ஓங்கி வளர்வது.


2.

எண்குணத்தான் ஐந்தொழிலான் யான்காண் தயவாகி
உண்மலர்ந்த(து) இன்றுஇருபத் தொன்று.

கு. வி.

தயவு ஒளி நெறி உள்ளிருந்து உதித்து உலகில் நிரம்பக் கண்டு கொள்ள நேர்ந்துள்ளது. இது சமயம், உலகில் நிறைந்த தயா ஜோதியே, எண்குணத்தான் என்றும். ஐந்தொழிலான் என்றும் காண்கின்றோம்.

தயா உணர்வினாலே கருதி, அத்தயவினாலே அறிந்து கொள்ளப்பட உள்ள கடவுள் தத்துவம் தான் இங்கு எண்குணத்தான். எண்ணத்தகு தன்மையன் எனவும், ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐஞ்செயல் புரிகின்றவன் எனவும் தெளியலாகும்.

இருபத்தொன்று என்றதின் விளக்கம்.

இரு-பெரிய, பத்து-பற்று, ஒன்று-பொருந்து. அதாவது, அக மலர்ந்த தயவு ஒளி நமக்கு பெருங் கடவுட் பற்றைத் தந்து அதனோடு ஒன்றுபடச் செய்வதாம்.

மேலும் இத்தினம், (இக்குறள் வெளிப்பட்ட நாள்) 2.1.1956. இது 2-ம், 1-ம் நாளும் மாதமுமாகி நிற்க (1+9+5+6) 21-ஆண்டு எண்ணைக் குறிப்பதாம்.

அன்றியும், நமது ஆன்மா யகரமாகிய பத்து என்ற எழுத்து எண்ணால் குறிக்கப்படுவதால், சீவான்ம பரமான்ம ஐக்கிய நிலையை இருபத்து ஒன்றாகக் கொள்ளலாகும்.

சைவ ஆகமத்தில், சிவகுணம்-8, சீவகுணம்-8. அது,


சிவகுணம் -

1. தன் வயத்தன் ஆதல்

2. தூய உடம்பினன் ஆதல்

3. இயற்கை உணர்வினன் ஆதல்

4. முற்றும் உணர்தல்

5. இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்

6. பேரருள் உடைமை

7. முடிவிலா ஆற்றலுடைமை

8. வரம்பிலின்பமுடைமை

சிவகுணம், ஜீவகுணம் எட்டெட்டாகவும் ஐந்தொழில் கொண்டு சிவம், ஜீவனைத் தன்மயம் ஆக்கிக் கொள்வதும் குறிக்கப்படும். ஆதலால், இந்த (8+8+5-ம்) இருபத்தொன்றையே குறிப்பதாம்.

அன்பு மதம் எனப்படும் இசுலாத்தில் பிறைக்குறியின் அடியிலிடும் 786ம் இருபத்தொன்றே.

கிறிஸ்துவ உண்மையும் இதுவே என்பதை, ஏசுவை 18 அடி சிலுவையில், ஒன்றில் மூன்றாம் (திரி ஏகத்துவம்) அதாவது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை அச் சிலுவையில் சேர்த்துள்ளனர். இதனால் (18+3=21) அதுவும் 21 ஆம்.

இவை போன்று பிற மதத்தும் காணலாம். ஆதலின், இச் சுத்த தயா நெறிக்குள் எந்நெறியும் அமைவதாம்.


3.

புலையகப் பற்றறுத்துள் தங்கித் தயவால்
உலகில் மகிழ்ந்து வொளிர்

கு.வி.

தயவு மார்க்கத்தில் ஒழுகுபவர்கள் உள் உணர்ந்து தயவு செய்தல் வேண்டும். யாவரிடத்தும் தடைபடாத் தயவு செலுத்தற்கு தேகப்பற்றை முதலில் ஒழித்தல் வேண்டும். அப்பொழுதுதான் செய்பணியாவும் கடவுளுக்கே புரியும் தொண்டாகும். இதனால் பெரு நலத்துடன் விளங்கலாம்.


4.

ஒன்றுநீ யல்லை உனையன்றி யொன்றில்லை
என்றுநீ காட்டினை யின்று

கு. வி.

முன் குறளில் குறித்த தேகப்பற்று அறுதற்காக, உண்ணின்று நம் பதி உணர்த்துவது இதுவாகும். யாதெனில், என்றும் உள்ளது, ஒன்றாகிய மெய்ப் பொருள் ஒன்றே. அது, உன்னால், உன்னில் அறியப்படுவதல்லாமல், பிற இடத்தில் காண்டற்கில்லை என்றும், ஆனால், இப்பொழுது அந்த ஒன்று நீ அல்ல, புலை உடம்பின் பற்றால் சரீரியாக இருக்கிறாய் என்றும், அப்பற்று அற்றால்தான் அசரீரியாக உள்ள அந்த உன்னை நீ கண்டு கொள்ளுவாய் என்றும் உணர்த்தப்படுகின்றதாம்.

இதனால் தேகப்பற்றற்று தயா நெறியில் தழைப்போமாக.


5.

ஆன்மசிற் றம்பலத் தாரு மதுவேயின்
றூன்மே வுருவா யுணர்.

கு. வி.

சிற்றம்பலமாகிய ஆன்மாவில் பொருந்தி விளங்குகின்ற ஒன்றுதானே, இன்று இத்தேகத்தில் நிறைந்து, உணர்வில் கலந்துள்ள உண்மை அறியப்படுகின்றது. இவ் வுண்மை அறிவால் தேகப்பற்று நீங்கி, கடவுட் பற்று உண்டாகின்றது. அதோடு தயவு நெறியும் வெளிப்படுகின்றது.


6.

நந்தா வொளிமலராம் நம்பதியே உண்ணின்றே
ஐந்தாய் விரிந்த தறி.

கு.வி.

மன்னகத்தே நித்தியமாய்த் திகழ்கின்ற நமது தலைவர் ஒரு தயாபெருஞ்ஜோதி மலராவார். அவரது தயா பெருஞ்சக்தியே, மலர்களில் ஐந்து இதழ்களாய், நம் ஐம்பொறி உடம்பில் ஐம்புலனாய், விரல்கள் ஐந்தைந்தாய், பிராணன் – உப பிராணன் எனும் உயிர்க்காற்றும் ஐந்தைந்தாய், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் எனும் ஐந்து உணர்வு நிலையாய், புறத்தே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனும் நிலம் ஐந்தாய், சூழ் உலகெல்லாமான மகா பிரபஞ்சமாய் விரிந்துள்ளதாம்.


7.

கலைசேர் புனைசுருட்டுக் கற்பனையாற் கண்ட
திலையே நிறையா மியல்.

கு.வி.

உலக வாழ்வில் நிலையான இன்பம் அடைவதற்கு, சுத்த தயா நெறியே இயல் நெறியாக உள்ளது. இதனை விடுத்து, கலையுரைத்த கற்பனை மார்க்கங்களில் சென்றால் அழிவுதான் காண்கின்றோம். தயா நெறியால் உண்மை கண்டு பேரின்பில் நிலைத்தல் வேண்டும்.


8.

களிமயக் கீன்கலை காட்டாதே நல்ல
அளிசேர் அறிவு அலர்.

கு.வி.

அன்பும் அறிவும் ஓங்க தயவு நெறியிற் பயின்று அருட்கலையாக உலகியலை நடத்த வேண்டும். இப்படி அல்லாது பொறி மயங்கிப் புலனெறியால் கலை வளர்த்தால் பெரு நன்மை உண்டாகாது.


9.

சிற்பதளி யேமுதலாச் செப்புகலை நூலனைத்தும்
கற்பனையில் உற்பவமே காண்.

கு.வி.

வேத முதலான கலைகளுக்கு விளக்கந்தர எழுந்த சிற்ப கவின் நிறை ஆலயங்கள், அற்புத சின்ன வடிவங்கள் யவும் ஒருமை மனக் கற்பனையில் தோன்றிப் பெரு முயற்சியின் பயனாக வெளிப்பட்டனவாம்.

தயா நெறியில் செல்வோர்க்கு இக் கற்பனைகள் எல்லாம் பெருங்கடவுட் சக்தியின் சிற்றணுக்களாகத் தோன்றி, நிறையருட் பெருஞ்சக்தியைக் கண்டு கொள்ளச் செய்வனவாம்.10.

கண்ணாலே யோடுமனக் கண்ணாலே காண்பவெலாம்
எண்ணாதே யின்பளிப்ப தென்று.

கு.வி.

தயவு நெறியில், தயா வாழ்வில் பெறக்கூடிய இன்பமே உண்மை இன்பமாதலின், பிறவற்றைக் கண்ணுக்கினியனவாகக் கண்டு களித்தலும், மனோ கற்பனையில் கருதிக் கண்டு மகிழ்தலும் இன்பமல்லவாம்.