தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 20 மார்ச், 2009

பெரியசாமி

சங்கிலி கருப்பு,முனி,பெரியசாமி,பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணன் தான் எங்கள் குல தெய்வம்.மாசி பெரியண்ணன் கோவில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மாசிக்குன்றில் அமைந்துள்ளது.சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடி உயரமுள்ள வேங்கை என்னும் மிருகவாகனத்தின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் பெரியண்ணன்.திருச்சி,நாமக்கல்,துறையூர் என பல மாவட்டங்களில் பெரியண்ணன் கோவில்கள் இருந்தாலும்.இங்குள்ளதுதான் மூலம் என்கின்றனர்.மற்ற இடங்களின் சாமியின் உத்திரவுவாங்கி அடிமண் எடுத்து கோவில்கள் எழுப்பப் பட்டிருக்கின்றன.

சோழிய வெள்ளாளர் சமூகத்திற்கும், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்திற்கும் பெரியண்ணன் குலதெய்வமாக விளங்குகிறார்.

கொல்லி மலை-

நாமக்கல் மாவட்டத்தில் பரந்து விரிந்திருக்கின்ற பெரிய மலை கொல்லி மலை.கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடிக்கும் மேல் உயரம் கொண்டதாக உள்ளது.பசுமையை தன்னுள் தக்க வைத்துக்கொண்டு அளவிடமுடியாத அளவிற்க்கு மகிமைகள் கொண்டுள்ளது.எங்கேயும் கிடைக்காத மூலிகைகள் பல இங்கு கிடைக்கின்றன.இங்கே மின்சாரமே இல்லாத சில கிராமங்களில் கூட இருக்கின்றன என்னுஞ் செய்தி வியப்பை தருகின்றது.இதன் பெருமைகளை முன்பே நாம் கண்டுவிட்டோம்.

மாசி குன்று-

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர்.அது மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.அதன் வரலாற்றை கேட்டறிய சற்று சிரமமாக இருந்தது.எட்டு நூற்றாண்டுகளை கடந்து இன்றும் அக்கோவில் சிறப்பாக இருக்கின்றது,என்ற செய்தி கேட்டால் உச்சி சிலிர்க்கின்றது.அந்த வரலாற்று கதை இதுதான்.

காசியிலிருந்து பார்வதி தேவியும்,பெருமாளும் தென்திசை நோக்கி வந்தனர்.பார்வதி தேவி காமாட்சியாகவும்,பெருமாள் பெரியண்ணனாகவும் மனித உருவெடுத்தனர்.துரையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார்.பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின் பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது.அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு சென்றார் பெரியண்ணன்.அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது.இது போல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார்.

மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர்.அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்து வருகிறார்.

வேண்டுதலுக்காக வேலில் கோழிகள்



மூலிகை குச்சிகள்



மூலிகை




மாசி பெரியசாமி கோவில்




அன்ன காமாட்சியம்மன் கோவில்




கல்லாத்துக் கோம்பு-

இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதயாகும்.வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்கு சென்றார்.காமாட்சியின் தெய்வதன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும் செய்ய வில்லை.கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைக்கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற,பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில் தங்கிவிட்டார்.

கொல்லிப் பாவை-

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம்.சிவனுக்கு கால பைரவன் காவல் காப்பது போல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல்.ஏதேனும் தீய எண்ணங்களை மனதில் வைத்து வருபவர்களை தன்னுடைய மாய சொருபங்களால் மயக்கி கொன்றுவிடுவாள் இந்த பாவை.பாவை என்றால் பெண் என்று பொருள். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.இதன் ஆலையம் கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது.தற்போது கீரம்பூர் என்னும் கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.

வேண்டுதல்கள்-

1. பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டி பெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
2. தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில் குத்துகின்றனர்.
3. உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
4. ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
5. படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
6. கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும் செய்கிறார்கள்.
7. மணிகளை கட்டுதல்,குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல்,வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

கிடைக்கும் பொருட்கள்-

மூலிகை மலை என்பதால் ஏகப்பட்ட மூலிகைகள் கிடைக்கின்றன.பல் வலிக்கு,மன நோய்க்கு என மூலிகைகளை தருவதோடு பயண்படுத்தும் முறையையும் தெளிவாக கூறுகின்றனர்.

ஆண்மைக்குறைவு, வெள்ளைப் படுதல் போன்றவைகளுக்கும் இங்கே மூலிகைகளை விற்கின்றார்கள்.

முக்கனிகளும் கிடைக்கின்றன.மலை வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
அசைவப்பிரியர்களுக்கு இங்கே கொண்டாட்டம் அதிகம்,இங்குள்ள ஆடுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதாய் கூறுகின்றனர்.

புதிர்-

சிலர் பெரியண்ணனை சிவனின் வழிதொன்றலாகவே கருதுகின்றார்கள்.அவரே தம் மனைவி பார்வதி தேவியுன் காசியிலிருந்து கொல்லி மலைக்கு வந்தார் என்றும் கூறுகின்றனர். பெரியண்ணனின் வழிபாட்டு முறைகள் சிவ வழிபாட்டை சார்ந்தே உள்ளது.சிவராத்திரி மகிமையாக கொண்டாடப் படுகின்றது.திருநீரு பிரசாதமாக தரப்படுகின்றது.நமது மரபுப் படி திருமணம் ஆன பெண் கணவனோடு மட்டும் தான் வெளியே வருவாள்.எனவே அவர்கள் சிவனும் பார்வதியும் என்றே அடித்துக் கூறுகின்றனர்.மேலும் சித்தர்கள் வாழ்வதாகவும்,பெரியண்ணனை வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.

சித்தர்கள்-

சிவம் இருக்கும் இடத்தில் சித்தர்கள் இல்லாமலா.இங்கு கிடைக்கும் மூலிகைகளுக்காக சித்தர்கள் அடிக்கடி வந்து போகின்றார்கள் என்கின்றனர் சித்தர்களை பார்த்ததாக சொல்லும் சில கிராமத்துவாசிகள்.பறந்து விரிந்து கிடக்கின்ற கொல்லிமலையில் சித்தர்கள் குகைகளையும் அவர்கள் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்களையு;ம் ஒரு தனியார் தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வது எப்படி-

நாமக்கலிருந்து அறப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில் சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடக்க செல்ல வேண்டும்.

அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்ல வேண்டும்.இந்த பாதையில் ஓடையொன்று உள்ளது.அதன்பிறகு இருக்கும் வழுக்குப் பாறையை தாண்டினால் வந்துவிடும் பெரியண்ணசாமி கோவில்.

இதைப் படிக்கும் அன்பர்கள் பெரியண்ணன்,காமாட்சி,கருப்புசாமியின் குல வாரிசாக இருந்தால் முடிந்த மட்டும் கொல்லிமலைக்கு சென்று சாமியை தரிசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.