தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 20 மார்ச், 2009

நாரயண பிரம்மேந்திரர்

என்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்களை சென்ற வாரம் வீட்டிற்கு கூட்டி சென்றேன்.என் ஊரான காட்டுப்புத்தூரின் மகிமை என்னவென்றால் அது திருச்சி,நாமக்கல்,கரூர் என மூன்று பெரிய நகரங்களுக்கு மத்தியில் இருக்கின்றது.அதனால் அந்தந்த ஊர்களின் சிறப்புமிக்க இடங்களை சுற்றி காண்பித்தேன்.அதைவிடவும் எங்கள் ஊரில் சிறப்புமிக்க ஒரு இடத்தை அவர்களுக்கு காண்பித்தேன்.அது தான் நாராயண பிரம்மேந்திரர் மடம்.
இந்த நாராயண பிரம்மேந்திரர் மடத்தை பார்த்த நண்பர்கள் அதிசயித்தார்கள்.அவருடைய மகிமைகளை எடுத்துச் சொல்லவும் ஆனந்தப்பட்டார்கள்.உடனே என்னிடம் இந்த மடத்தைப் பற்றி இணையதளத்தில் கண்டிப்பாக எழுது,அது பலருக்கும் பயணளிப்பதாக இருக்கும் என்று அன்பு கட்டளையிட்டார்கள்.அதன் விளைவு இக்கட்டூரை.
தள வரலாறு-
நாராயண பிரம்மேந்திரர் தன்னுடைய அறுபது ஆண்டுகளை கழித்து,அவர் வாழ்ந்த இடத்திலேயே நூற்றி இருபதாவது வயதில் சமாதி அடைந்த இடம் இந்த காட்டுப்புத்தூரில் இருக்கும் மடம்.
நாராயண பிரமேந்திரர் வரலாறு-
பிறப்பும் இல்லறமும்-
நாராயணன் பிறந்தது ஆந்திரா மாநிலத்தில் உள்ள வேட்கூர் என்னும் கிராமம்.அவருடைய தந்தையார் பெயர் வேங்கடாசல ரெட்டி.நாராயணன் படிப்பிலும் பக்தியிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.கற்றதை பிறருக்கு எளிய முறையில் விளக்கி சொல்லுவார்.கோவில்களுக்கு நண்பர்களுடன் சென்று வழிபடுவார்.
இல்லற வாழ்வு-திருமணத்திற்கு நாராயணன் மறுப்பு தெரிவித்த போதும் உறவுகள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்தனர்.நாராயணனின் மனைவி பெயர் இலக்குமி.இவர்களின் இல்லறம் நல்லறமானதில் ஆணொன்றும் பெண்ணொன்றும் பிறந்தன.இருவரையும் கல்வி கற்க வைத்து,தக்க காலத்தில் திருமணமும் செய்தார்.
தடுத்தாட் கொள்ளல்-
மூன்று முறை அம்மையே எடுத்துக் கூறியும் நாராயணன் துறவு மேற்கொள்ளவில்லை.அதனால் நான்காம் முறை கனவில் வந்த அம்மை ஒரு துணியில் நீ சம்பாதித்த பணத்தை கட்டி ஓர் இடத்தில் யாருக்கும் தெரியாமல் புதைத்து வை.ஒருவாரம் கழித்து அங்கு சென்று பார் அது நிலைத்திருக்குமா என்றாள்.இருமுறை அவ்வாறு செய்து பார்த்ததில் பணம் காணாமல் போனது.அதன் அர்த்தம் உணராமல் நாராயணன் மிகவும் தவித்து போனார்.என்றாலும் இல்லறத்தை துறக்கவில்லை.மீண்டும் கனவில் வந்த அம்மை இந்த வாழ்க்கை நிலையில்லை என உணரவைத்தார். அதோடில்லாமல் நாராயணனின் உறவினர்கள் அடுத்தடுத்து மாண்டனர்.சுமார் முப்பது பேருக்கும் மேல் மாண்டதை எண்ணி கலங்கினார் நாராயணன்.
ஐந்தாம் முறையாக கனவில் வந்த அம்மை “ஒட்டனாய் பிறந்தபோது கல் சுமக்கவில்லையா?.நாட்டுக்குள் தோட்டியாய் பிறந்த போது மாட்டைக் கட்டி சுமக்கவில்லையா?.இப்போது மார்நோக திருவோட்டை சுமந்தால் மட்டும் தேகம் இளைத்துவிடுமா?.”என கேள்வி கேட்க.இனியும் இப்படியே இல்லறத்தில் இருந்தால் ஈசனுக்கு கோபம் வருமென எண்ணி துறவறம் பூண்டார் நாராயணன்.
சித்தூர்-
நாராயணனை பல இடங்களில் தேடி கடைசியாக சித்தூரில் கண்டுபிடித்தனர் அவரின் உறவுகள்.ஆனால் இப்போது அவர் நாராயணாக இல்லை பிரம்மேந்திரராக இருந்தார்.இல்லற வாழ்க்கையை தாம் துறந்துவிட்டதை எடுத்துக்கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.அங்கிருந்த ஒருவர் அவருக்கு தினமும் ஒருபிடி கடலைப் பருப்பும் மோரும் தந்து அன்புடன் ஆதரித்தார்.
சோலை,நதி,மணல் மேடு என அனைத்து இடங்களிலும் பத்மாசனத்திலிருந்து தேவியை வழிபட்டு வந்தார்.பார்வதி தேவியின் பக்தி தவத்தில் மண்ணையும் நீரையுமே உணவாக் கொள்ள ஆரமித்தார்.சித்தூரில் மூன்று வருடம் தங்கியிருந்தார்.மக்கள் இவருடைய மகிமைகளை புரிந்து கொண்டு வரம் தர வேண்டுமென தொல்லை செய்தனர்.தாம் தனியாக தவமிருக்க எண்ணி சித்தூரிலிருந்து வெளியேறினார்.
பழனிமலை பயணம்-
சித்தூரிலிருந்து திருப்பதி செல்லலாம் என முடிவெடுத்தார்.வேங்கடமுடையான் மீது நூறு விருத்தம் பாடினார்.ஆனால் திருப்பதி பயணம் வேண்டாமென உத்திரவு வர,அதை ஏற்றுக் கொண்டு தென்திசையில் நடக்கலானார்.ஒரு துறவியிடம் நம்மை போன்றவர்களுக்கு ஏற்ற இடம் இங்குள்ளதா என வினவ,அத்துறவி பழனிமலையை ஏற்ற இடமாக சொன்னார்.
காட்டுப்புத்தூருக்கு வருதல்-
பழனி செல்ல திருச்சிராப்பள்ளி கருர் வழியாக செல்ல இருவரும் முடிவெடுத்தனர்.அதன்படி திருச்சிராப்பள்ளி வர அங்கே காட்டுப்புத்தூரிலிருந்து வருகின்ற சாதுகள் தங்களுக்கு உண்டியும்,உணவும், அரை ரூபாயும் தந்த ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசுவதை கேட்டார் நம் சுவாமிகள்.தனக்கும் குளிருக்கு உடையும்,பணமும் கிடைக்குமென காட்டுப்புத்தூருக்கு வந்தார்.அவருடன் வந்தவர் சாவடில் இருக்க பிரம்மேந்திரர் மட்டும் ஊருக்குள் வந்தார்.
காட்டுப்புத்தூரில் தங்குதல்-
நாராயண பிரம்மேந்திரர் ஊருக்குள் வருவதைக்கண்ட சந்திரசேகரப் பிள்ளை,செவ்வைத்தியலிங்கம் பிள்ளை,சஞ்சீவி உபாத்தியாயர் என்ற மூன்று உள்ளூர் வாசிகள்,அவருடன் பேசி மகிமையை அறிந்து கொண்டார்கள்.தங்கள் ஊரிலேயே தங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்ள,பிரம்மேந்திரரும் சம்மதம் தெரிவித்தார்.அந்த மூன்று பேரையும் காட்டுப்புத்தூர் மக்கள் மிகவும் மதிப்புடன் மரியாதையுடனும் ஞாபகம் வைத்துள்ளார்கள்.காட்டுப்புத்தூர் மக்களின் அன்பைக் கண்டு பழனி செல்லும் முடிவை மறந்தார்.ஊர் மக்கள் அமைத்து தந்த குடிலில் வசிக்கலானார்.
சமாதியடைதல்-
காட்டுப்புத்தூரில் அறுபத்து மூன்று வருடம் வாழ்ந்து பல்வேறு அதிசியங்களை நிகழ்த்தினார் பிரம்மேந்திரர்.நூற்றி இருபதாவது வயதில் ஈசனிடம் கலந்து பிறவியை முடிக்க எண்ணினார்.அதனால் எதையும் உண்ணாமல் இருந்தார்.பிறகு கலியுகம் 5012 விரோதிகிருது வருடம் மாசி மாதம் 28ம் தேதி வாரம் கோட்டை நட்சதிரத்தில் அடியார்கள் புடை சூழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே உடலை விடுத்து ஈசனை அடைந்தார்.
சிறப்பு-
பசிக்கும் போது ஒருபிடி மணலும்,நீரும் மட்டும் உண்டு உயிர்வாழ்ந்த ஒப்பற்ற துறவி.இவ்வாறு பதினைந்து வருடங்கள் இருந்ததாக கூறுகிறது இவரைப் பற்றிய பிரம்மேந்திரகீதம் என்னும் நூல்.
துயரமென்று யார் வந்தாலும் நல்வார்த்தைகள் கூறி,அவருடைய துயரங்களை அகற்றும் சாது.
அப்பாதுரை பிள்ளை என்பவர் தம் மனைவிகள் இருவருக்கும் குழந்தையில்லாமல் போக பிரம்மேந்தரிடம் வேண்டினார்.அதன் பிறகு அவரின் ஒரு மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கோட்டையம்மாள் என்னும் பெண்மணி வேகவைத்த துவரம் பருப்பையும் சர்க்கரையையும் நெய்யும் சேர்த்து தினமும் பிரம்மேந்திரருக்கு தருவார்,அவரும் அதை அன்பு கூர்ந்து ஏற்றுக்கொண்டார்.ஒரு முறை 15 படி அரிசி சமைத்து ஊரிலிருக்கும் மக்களுக்கு அன்னமிட்டார்.அப்போது பிரம்மேந்திரரையும் அழைக்க அவரும் ஒரு கொட்டாங்கட்சி அளவு அன்னம் மட்டுமே உண்டார்.
செல்லும் வழி-
காட்டுப்புத்தூருக்கு செல்ல நாமக்கலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இருக்கிறது.
திருச்சியிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.என்றாலும் நேரடி பேருந்துகள் குறைவு.எனவே திருச்சியிலிருந்து சேலம் அல்லது நாமக்கல் செல்லும் பேருந்துகளில் ஏறி தொட்டியம் என்னும் ஊரில் இறங்கினால்,ஏகப்பட்ட பேருந்துகள் காட்டுப்புத்தூருக்கு உள்ளன.
கரூரிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.அதிலும் வேலூர்,மோகனூர் வந்துவிட்டால் இன்னும் அதிக பேருந்துகள் கிடைக்கும்.
நன்றி-
வரலாறுக்காக பிரம்மேந்திரகீதம் புத்தகத்திற்கும்,
இதர தகவலுக்காக என் அன்னை மருதாம்பாள் தமிழாசிரியைக்கும்.