தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 4

சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 1
சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 2
சித்தமெல்லாம் சிவமயம் பாகம் 3

அகத்தியர்

குறிப்பு -

அகத்தியரை ஒட்டுமொத்த சித்தர்களின் குரு என கூறுகிறார்கள். தொல்காப்பியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து இவர் எனவும், தேரையார் போன்ற சிறந்த சித்தர்களுக்கு மருத்துவம் கற்று கொடுத்தது இவர் எனவும் கூறுகின்றார்கள்.

இவருக்கும் முன்னால் கூட வாழ்ந்த சித்தர்கள் பலர் இருந்தாலும், இவருக்கு சற்று கூடுதல் மரியாதை. இவர் குட்டையான உருவம் கொண்டவராதலால் குறுமுனி எனவும் ஒரு சொல் வழக்கு இருக்கிறது.சித்தர், முனிவர், குரு என்றெல்லாம் சொல்வதை விடவும் தமிழ்த் தொண்டர் என கூறுவது சிறந்தது.

சித்த மருத்துவம் மட்டுமல்லாது, நாடி சோதிடம், பட்சி சாத்திரம் போன்ற பல துறைகளிலும் இவர் சிறந்து விளங்கியுள்ளார். கிட்டதிட்ட 25 நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளதாக வலைதள நண்பர்கள் பட்டியல் இடுகின்றார்கள். நான் திரட்டிய செய்திகளை முடிந்தளவு சுருக்கமாக சொல்ல முற்படுகிறேன். அதற்கு முன் தங்களின் பொன்னான நேரங்களில் சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்து புத்தகங்களாகவும், கட்டூரைகளாகவும் வலைப்பூக்களில் பதித்தும் தமிழ்த் தொண்டு செய்த அனைத்து ஆன்மீக நண்பர்களுக்கும் என் பல கோடி நன்றிகள்.

வரலாற்று கதைகள் –

பிறப்பு –

அகத்திய மாமுனியின் பிறப்பு பற்றி பல விதமான கருத்துகள் வலம் வருகின்றன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும்,
மித்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

சித்தர்களைப் பற்றிய தீவிர ஆய்வில் இறங்கிய நண்பர் டாக்டர் மந்தயம் குமார் அவர்கள் விங்கிபீடியாவில் தன்னுடைய ஆய்வை தெளிவாக வெளியிட்டுள்ளார்.

அதில் அகத்தியர் பிறந்த தினம் 14-02-7673 இது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர். அகத்தியர் பிறந்த மாநிலம் குஜராத். தாயார் பெயர் : இந்துமதி. இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தவர். தந்தையார் பெயர் : பார்கவா. இவர் குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும். இவர் பல கலைகளைக் கற்றுத் தேர்ந்து இருந்தார். பெற்றோர்கள் இருவரும் ரிஷப முனிவரின் வழிவந்த பசுபதா எனும் முனிவரின் பக்தர்களாக விளங்கி வந்தனர் என கூறுகிறார்.

அகத்தியர் குஜராத் மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் நாட்டிற்கு வந்தமைக்கு காரணம் என்ன? சித்தர்களில் தலைவனாக உயர்ந்து நிற்க அகத்தியர் என்ன செய்தார்? ஏகப்பட்ட கதைகள் மற்றும் வரலாறுகள் அகத்தியரை சுற்றி வருகின்றன.

பொதிகை மலைக்கு வந்த கதை –

பொதியமலை அல்லது பொதிகை மலை எனப் புகழ் பெற்ற மலையுடன் சித்தர் அகத்தியருக்கு பெரும்பங்கு இருக்கிறது. இவர் வடநாட்டில் கைலாசத்தில் இருந்தார். சிவனுக்கும் அம்மைக்கும் நடக்க கூடிய திருமணத்தை காண அனைவரும் வடக்கு நோக்கி வந்துவிட்டால், தெற்க்கு பகுதியில் சமன்நிலை பாதிக்கப்படும் என சிவனே அகத்தியரை பொதிகை மலைக்கு செல்ல சொன்னதாக ஓர் கதை உண்டு.

தென்பகுதிக்கு வந்த அகத்தியருக்கு கடவுளின் திருமணத்தை காண இயலாது போனதுபற்றி மிக வருத்தம். தம் பக்தர்களின் குறைதீர்க்கும் நாயகன் சென்னை திருவான்மையூரில் இருக்கும் மருந்தீஸ்வர்ர் கோவிலில் அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் எழுந்தருளியுள்ளதாக அக்கோவிலின் திருவரலாறு கூறுகிறது.மேலும் அகத்தியருடைய தீராத வயிற்று வலியை நீக்க பரமனே வந்து மருந்தருளியதாகவும், அதனால் மருந்தீஸ்வரன் என்ற பெயர் பெற்று கோவில் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.அகத்தியருக்கு காட்சிதந்த வன்னி மரம் திருதளத்தில் தலவிருட்சமாக உள்ளது.

அகத்தியருடைய தமிழ் குரு –

இந்தியாவின் வடக்கு பகுதியில் இருந்த இவருக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்த நிலையில் தென்பகுதிக்கு வந்து செயல்புரிய தமிழ் மொழியறிவு தேவைப்பட்டது. அதற்காக சிவனின் தவப்புதல்வன் கந்தனிடம் தமிழ் பயின்றதாக இவரே பாடலில் எழுதியுள்ளார். இவர் நந்தி மற்றும் தன்வந்திரி ஆகியோருக்கு சீடனாக இருந்துள்ளார்.

சில வரலாறு தெரியாத நண்பர்கள் தமிழை தோற்றுவித்தே அகத்தியர்தான் என்று கூறுகிறார்கள். அகத்தியர் தென்பகுதிக்கு வரும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழ் இருந்துள்ளது என்பது வரலாற்று செய்தி.

விந்தியமலையின் செருக்கை அடக்குதல் –

தென்நாட்டுக்கு அகத்தியர் வரும் வழியில் மலைகளில் மிக உயரமாக இருந்த விந்திய மலையானது அகத்தியருக்கு வழி விட மறுத்தது. சிவனின் அருளைப் பெற்ற சித்தர் என்பதால் அதனுடைய செருக்கை அழித்து தான் வடக்கு திசைக்கு மீண்டும் வரும் வரை குனிந்தே இருக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்தார். காலம் அவரை வடக்கு திசைக்கு திரும்ப அனுப்பாததால் விந்திய மலை உயரம் குறைந்தே இருப்பதாகவும் ஒரு புனைவுக் கதை உண்டு.

விந்தியனின் சிறகை சிவனே வந்து வெட்டியதாகவும் ஒருகதை இருக்கிறது.

காவிரி தோன்றிய கதை –

சிவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு பொதிகை மலை வந்த அகத்தியர், சிவனுடைய சிரசிலிருந்து ஓடிவரும் கங்கை நதியின் சிறு பகுதியை தன்னுடைய கமண்டலத்தில் பிடித்து வந்தார். வறண்ட நிலப்பகுதியாக இருந்த தென் பகுதிக்கு நீர் கொண்டு வந்தவர், குளித்து விட்டு கொஞ்சம் களைப்பு நீங்கி விட்டு செல்லலாம் என ஒரு பெருங்கல்லின் மீது தன்னுடைய கமண்டலத்தை வைத்துவிட்டு சென்றார். அப்போது சிவக்குழந்தை வினாயகர் காகம் உருவெடுத்து அந்த கமண்டலத்தினை தட்டி விட்டார். அது உடனே ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. காகம் வந்து தட்டிவிட்டு விரிந்த நீர் என்பதால், அது காவேரி எனப் பெயரப் பெற்றது.

மர்மங்கள் தொடரும்...