தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

சித்தமெல்லாம் சிவமயம் – 3

அன்பு எதையும் பொருட் செய்யாது என்பதே உண்மை.ஈசன் அருளில் தொடரின் மூன்றாவது பாகம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அது உங்களின் பார்வைக்கு.

சிவனோடு பதினென் சித்தர்களும்.
சித்த மருத்துவம் –

சித்தர்கள் மக்களுக்கு செய்த நன்மையில் மிக முக்கியமானது மருத்துவ உதவி. கொல்லிமலை, சதுரகிரி, பொதிகை மலை, பழனி மழை, திருவண்ணாமலை என பலபல மலைகளில் செடிகள், கொடிகள், பட்டைகள், வேர்கள் என ஆய்வு செய்து மருத்துவ துறைக்கே புதிய வழிமுறையை வகுத்தவர்கள். இதை நாம் தமிழ் மருத்துவம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என பல பெயர்களில் அழைக்கிறோம்.

இந்த வைத்திய முறையில் மட்டுமே பக்க விளைவுகள் எனப்படும் பெரும்குறைபாடு இருக்காது. எளிமையான வழி முறைகளும், விலை அதிகமில்லா இயற்கை தாவரங்களும் மக்களிடம் சித்த மருத்துவத்தை தனித்தன்மையில் வைத்திருக்கின்றன. பல மருத்துவமுறைகளில் குணமாகாத நாள்பட்ட நோய்களுக்கும் சித்த மருத்தும் தீர்வு சொல்கின்றது.

சித்தர்கள் வெறும் செடி,கொடிகளை மட்டும் ஆய்வு செய்யவில்லை. மனிதனின் உடலினையும் ஆய்வு செய்திருக்கின்றார்கள். நாடிகள், பித்தங்கள், ஞானேந்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து தெளிவான மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

தாங்கள் கண்டறிந்த எண்ணற்ற மருத்துவ குறிப்புகளை மறைக்காமல் பாடல்களாக எழுதிவைத்தவர்கள். சில மதிப்புமிக்க குறிப்புகள் அடங்கிய நூல்கள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது என்பது வருத்தமான செய்தி. இந்த குறிப்புகள் தமிழில் மட்டுமல்லாது, சீன மொழியிலும் காணப்படுவதாக வரலாற்று ஆசிர்யர்கள் கூறுகின்றனர். இப்போதுள்ள ஆங்கில மருத்துவம் கூட அவற்றை சார்ந்து இயங்க தொடங்கிவிட்டது.

பக்க விளைவுகள் –

சித்த மருத்துவத்தைப் பொருத்த மட்டில் பின்விளைவுகள் என்ற பயங்கரம் இல்லை. மற்ற மருத்துவத்தில் ஒரு நோய் குணமாவதற்கு எடுத்துக் கொண்ட மருந்தானது மற்றொரு நோயை தோற்றுவிக்கும் குணம் படைத்தது.(என்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு கற்பப்பை புற்று நோய்க்கான மருத்தும் செய்யப்பட்டது. அந்த மருத்துவத்தின் பக்க விளைவால் சில நாட்களில் வெண்குஷ்டம் எனப்படும் தோல்வியாதி அவருக்கு வந்துவிட்டது.) ஒரு நோயை குணப்படுத்திய மருந்து மற்றொரு நோய்க்கு வழிகாட்டியாக அமைந்துவிடும் கொடுமை மற்ற மருத்துவங்களில் இருக்கிறது. ஆனால் முறையான சித்த வைத்தியத்தில் இல்லை.

பத்தியம் -

சித்த மருத்துவத்தில் பின்விளைவுகள் இல்லாதது எத்துனை சிறப்போ அது போலவே பத்தியமும். சில நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பத்தியம் எனப்படுகின்ற உணவு கட்டுப்பாடு உண்டு. இதன் மூலம் தேவையில்லாத ஒவ்வாமைகளை தடுக்கின்றனர்.

இரசவாதம் –

சித்தர்களைப் பற்றி இன்று பலரும் மிகஆர்வத்துடன் தெரிந்து கொள்ள காரணங்களில் ஒன்று இந்த இரசவாதம். இரசவாதம் என்பது ஒருவகையான வேதியியல் முறை. எளிய உலோகங்களுடன் சிலவகையான தாவர வகைகளைச் சேர்த்து தங்கம் தயாரிக்கும். சொர்ணம் என்றதுமே சொக்கி போய்விடும் மனிதர்களில் பலர் இந்த சூட்சமம் அறிந்துகொள்ள மலைகளில் அலைந்து கொண்டும், கோடிக்கணக்கான பணங்களை ஆய்வுக் கூடங்களிலும் செலவு செய்துகொண்டும் இருக்கிறார்கள்.

நீங்கள் இப்போது தான் இதைப் பற்றி கேள்விப் படுகின்றீர்கள் என்றால் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சரியான முறையில் செய்தால் நிச்சியம் தங்கம் கிடக்கும்.இதை ஆங்கிலத்தில் ALCHEMY என்று சொல்வார்கள்.இதைப் பற்றிய ஆய்வுகள் உலகமெங்கும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவற்றை சித்தர்கள் செய்தமைக்கு ஆதாரமான பாடல்கள் உண்டு. அதில் ஒன்றான திருமூலர் சொல்லும் செடியின் பெயர் பரிசனவேதி. அந்த பாடல்...

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருவான் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே

இப்படி செய்தால் தங்கம் கிடைக்குமா என ஐயப் படவேண்டாம். நிச்சியம் கிடைக்கும், ஆனால் அவர்கள் சொல்வது ஒரே ஒரு விஷயம் தான் சொர்ண ரகசியம் பலிக்க வேண்டுமென்றால் சொர்ணத்தின் மீது உங்களுக்கு ஆசை இருக்க கூடாது. உங்களுக்கு தங்கத்தின் மீது ஆசையில்லையென்றால் இரசவாத முறைகளை தேடிப் பாருங்கள். ஒருவேளை நீங்கள் அதிர்ஸ்டகாரனாக இருக்கலாம்.

பஞ்ச பட்சி சாத்திரம் –

ஐந்து வகையான பறவைகளை கொண்டு எழுதப்பட்ட சாத்திரம் பஞ்ச பட்சி சாத்திரம். அந்த பறவைகள் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில். பறவைகளுக்கும் மனிதனுடைய நட்சத்திரத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து இந்த சாத்திரம் எழுதப்பட்டிருக்கின்றது.

இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும்.அந்த ஐந்து செயல்களை ஊண், நடை, நித்திரை, அரசு, மரித்தல் என்பர். ஆனால் வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறி நடக்கும்.

நாடி சோதிடம்-

பஞ்ச பட்சி சாத்திரம் போல இதற்கு தனி முறைகள் காணப்படுகின்றன. இதனைப் பற்றியும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றியும் பின்பு விரிவாக காணலாம். நாடி சோதிடம் மற்றும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றிய பாடல்களை எழுதியவர் அகத்தியர்.

தியானம் மற்றும் யோகா –

முதலில் தியானத்திற்கும் யோகாவிற்குமான வேறுபாட்டினை புரிந்துகொள்ள வேண்டும். தியானம் என்பது மனதினைக் கட்டுபடுத்தக் கூடிய வகையில் ஓரிடத்தில் அமர்ந்தோ நின்றோ செய்யக் கூடிய அகம் சம்மந்தமான செயல்.ஒரு பொருளைப் பற்றி மட்டும் சிந்தித்தல் தியானம் என்கின்றனர்.பல வகையான தியான முறைகள் இன்றளவும் கடைபிடிக்கப் பட்டு வருகின்றன. சற்குருவின் தியான லிங்க அமைப்பை ஆன்மீக அறிவியலின் புதிய முறையாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.

யோகா என்பது அகத்துடன் புறத்தையும் இணைத்து சில படிநிலை ஆசனங்கள் மூலம் இறை நிலை அடைதல். தற்போது சற்குரு ஜக்கி வாசுதேவ், வேதாந்திர மகரிசி, நித்தியாநந்தர் போன்றோரும் யோகா வழிமுறைகளை கற்று தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வழிமுறைகளும் சித்தர்களின் வழிமுறைகளை சார்ந்தே உள்ளது.என்றாலும் அவைகளை அடிப்படியாக எடுத்துக்கொண்டு நடைமுறைக்கு தக்கவாறு மாற்றம் செய்துள்ளார்கள்.

பாஷானம் –

பாஷானம் என்பது விஷம். பாதரசம் முதலிய பாஷானங்களிருந்து மருந்து தயாரிப்பது, அதைக் கொண்டே சிலைகள் செய்வது போன்ற பெரும் கலைகளில் வல்லவர்கள் சித்தர்கள்.இந்த பாஷான சித்தர்களில் மிகப் புகழ் பெற்றவர் போகர். இவர் தான் பழனிமலையில் இருக்கும் நவபாஷானத்தினாலான தண்டபாணி முருகன் சிலையை செய்தவர்.

சித்தர்கள் வான் வழியே பறப்பவர்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அப்படி அவர்கள் பறப்பதற்கு பாதரசம் என்ற பாஷானத்திலிருந்து ஒருவகையான மணியை செய்து பறந்து செல்வார்கள் என ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்த மணியின் பெயர் சூதவான் மணி.

பாம்பாட்டி சித்தரின் பாடலில் இந்த மணியைப் பற்றிய செய்தி இருக்கிறது.

கற்பக மூலிகைகள் -

திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடல் -
"கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)

"செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)

"மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)

"தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)

"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்
மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது.மலைகளில் எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது.விண் வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.ஒவ்வொரு மூலிகைகளின் வேர்,தண்டு,இலை,காய்,பூ,கொட்டைகள் போன்றவற்றின் தனித்தன்மையினை அக்காலத்தில் சித்தர்கள் நன்கு ஆராய்ந்தும் உள்ளனர்.

இவர்கள் இயற்றிய பல தமிழ் நூல்கள் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், மருத்துவம் முதனான துறைகளுக்கு முன்னோடியாகவும் இருக்கின்றன.
இம்மூலிகைகளினால் குழந்தைகள் பிறப்பதனையும் நன்கு ஆராய்ந்து அறிந்துள்ளனர் சித்தர்கள்.

மேலும் அற்புதங்களுக்கு -

1.துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்.

2.முனைவர் இர.வாசுதேவன் *தமிழில் மருத்துவ இலக்கியங்கள்*, பூங்கொடி பதிப்பகம்.

3. http://snapjudge.wordpress.com/2008/04/29/ட்விட்டர்த்துவம்/#comment-12568.

4. விக்கிபீடியா

பி.கு –

அடுத்த சித்தமெல்லாம் சிவமயத்தில் அகத்திய மாமுனியின் அற்புதங்கள். காத்திருங்கள் அகத்தியரின் தரிசனத்திற்கு.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Sivan, Sivan Story, tamil old people, cetharkal, Sithairkal, Sithergal, Sithargal,mamuni, akatheyar,tamil medical, tamil Songs, tamil poems, 18 hindu guru, munevarkal, munigal

மர்மங்கள் தொடரும்...