காதல் நினைவுகள்-11
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
11. எங்களிஷ்டம்
தென்றல் விளைந்தது, முல்லை மலர்ந்தது,
தீங்குரற் ப‡¢கள் பாடின.
குன்று நற்சோலை விநோத மலர்க்குலம்
கோலம் புரிந்தன எங்க ணும்.
நின்றிருந்தான் தனியாய் ஒரு வாலிபன்
நேரிலோர் தாமரைப் பூவிலே
அன்புறு காதலி யின்முகங் கண்டனன்;
ஆம்பலில் கண்டனன் அவள் விழி!
கோதை இடைதனைப் பூங்கொடி தன்னிலும்,
கோவைப் பழத்தினில் இதழையும்,
காதலன் கண்டனன்; கங்கைப் பெருக்கெனக்
காதற் பெருக்கிற் கிடந்தனன்!
சீதள மென்மலர் தன்முக மீதினில்
சில்லென வீழ்வது போலவே
காதலி அக்கணம் பின்புற மேவந்து
கண்களைப் பொத்தினள் செங்கையால்!
கையை விலக்கித் திரும்பினன் காதலன்
காதலி நிற்பது கண்டனன்!
துய்யவன் நெஞ்சும் உடம்பும் சிலிர்த்தன
சுந்தரி தன்சிரிப் பொன்றினால்!
கொய்மலர் மேனியை அள்ளிடுவான்; அவள்
கோபுரத் தோளில் அழுந்துவாள்!
செய்வது யாதுபின்? இன்பநற் கேணியிற்
சேர்ந்தனர் தம்மை மறந்தனர்!
காதலர் இவ்விதம் இங்கிருந்தார் இதைக்
கண்டனர் கேட்டனர் ஊரினர்!
'ஏதுவிடோம்' என அத்தனை பேர்களும்
எட்டி நடந்தனர் சோலைக் கே.
பாதி மனிதர்கள் கோபத்திலே தங்கள்
பற்களை மென்றனர் பற்களால்!
மீதிருந்தவர் கத்திநற் கேடயம்
வேலினைத் தூக்கி நடந்தனர்!
நின்றதோர் ஆல மரத்திடை வீழ்தினை
நேரிற் பிணைத்ததோர் ஊஞ்சலில்
குன்றுயர் தோளினன் வீற்றிருந்தான் அந்தக்
கோல நிலாமுகப் பெண்ணுடன்!
சென்றனர் கண்டனர் காதலர் தங்களைச்
சீறினர்! பாய்ந்தனர் சிற்சிலர்;
கொன்று கிடத்திட வேண்டுமென் றேசிலர்
கோலையும் வேலையும் தூக்கினர்.
'பொய்தவிர் காதல்' எனப்படும் காம்பினில்
பூத்த அப்பூக்கள் இரண்டையும்
கொய்து சிதைத்திட ஓடினர் சிற்சிலர்
குன்றிட வைதனர் சிற்சிலர்!
வையக மீதினில் தாலி யிழந்தவள்
மையல் அடைவது கூடுமோ?
துய்ய மணாளன் இறந்தபின் மற்றவன்
தொட்டதை வைதிகம் ஏற்குமோ?
என்றிவை கூறினர் ஊரினர் யாவரும்!
இங்கிவை கண்டனர் காதலர்.
குன்றினைப் போல நிமிர்ந்தனர்! கண்ஒளி
கூர்ந்தனர்! அச்சம் தவிர்ந்தனர்!
இன்றுள தேசம் புதுத்தேசம் மணம்
எங்களிஷ்டம் எனக் கூறியே
அன்னதோர் ஊஞ்சலை உந்தி உயர்ந்துயர்ந்
தாடினர்; ஊரினர் ஓடினர்!