5. இன்னும் அவள் வரவில்லை
மங்கையவள் வீட்டினிலே கூடத்துச் சுவரில்
மணிப்பொறியின் இருமுள்ளும் பிழைசெயுமோ! மேற்கில்
தங்கத்தை உருக்கிவிட்ட வான்கடலில் பரிதி
தலைமூழ்க மறந்தானோ! இருள்என்னும் யானை
செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவர விலையோ!
சிறுபுட்கள் இன்னும்ஏன் திரிந்தனவான் வெளியில்!
திங்கள்முகம் இருள்வானில் மிதக்கஅவள் ஆம்பற்
செவ்வாயின் இதழளிக்க இன்னும் வர விலையே!
மணியசையக் கழுத்தசைக்கும் மாடுகளும் இன்னும்
வயல்விட்டு வீட்டுக்கு வந்தபா டில்லை.
துணியுலர்த்தி ஏகாலி வீடுநுழைந் திட்டால்
தொலையாத மாலைதான் தொலைந்துபோ மன்றோ!
அணியிரவும் துங்கிற்றோ காலொடிந்த துண்டோ;
அன்றுபோல் இன்றைக்கேன் விரைந்துவர வில்லை!
பிணிபோக்கும் கடைவிழியாள் குறுநகைப்பும் செய்தே
பேரின்பம் எனக்கருள இன்னும்வர விலையே!
முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி
முன்னடியும் பெயர்க்காமல் இன்னும்இருக் கின்ற
பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை?
பூங்கொடியாள் வருவதாம் நேற்றெனக்குச் சொன்ன
நல்லஇரா வருவதற்கு வழிதானோ இல்லை?
நானின்பம் எய்துவதில் யாருக்குத் துன்பம்?
சொல்லைத் தேன் ஆக்கிஎனை அத்தான் என்றள்ளிச்
சுவைக்கடலில் தள்ளஅவள் இன்னும்வர விலையே!
பெருமக்கள் கலாம்விளைக்கும் மாலைமறைந் திட்ட
பிறகுவரும் நள்ளிரவு! யாவருமே துயில்வார்!
திருமிக்காள் தன்வீட்டுப் படிஇறங்கும் போதில்
சிலம்பொலியும் இவ்விடத்தில் கேட்டிடும்என் காதில்!
உருமிக்க பெரும்புறத்துக் கரும்பாம்பின் தீய
ஒளிமாலை விழிஇன்னும் மூடாத தேனோ!
புருவத்து வில்எரியும் நீலமலர் விழியாள்
புத்தமுதம் எனக்குதவ இன்னும்வர விலையே!
சிற்றுளிக்கும் பிளவுபடா வல்இரும்பு போல்வாள்
தேனூற எனைநோக்கி வாய்மலர்ந்து நின்றே
நற்றுளிகள் அமுதமுதாய் நன்கருள்செய் திட்டாள்
நள்ளிரவில் அத்தானே நான்வருவேன் என்றே!
வெற்றொளியும் வெறுந்தொழிலும் மிகும்மாலை என்னும்
விழல்மடிய இருளருவி எப்போது பாயும்?
பொற்றொடியாள் எனைத்தழுவித் தழுவிநனி இன்பம்
புதிதுபுதி தாய்நல்க இன்னும்வர விலையே!
மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்தும்
வெந்துநீ றாகாமல் இருப்பதொரு வியப்பே!
நாற்றிசையும் பெருகிவரும் இருட்பெருவெள் ளத்தை
நடுவிருந்து தடுக்கின்றான் பரிதி; அவன் செய்கை
மாற்றியமைத் திடஏதும் வழியுண்டோ? என்றன்
மையலினை நான்பொறுக்க ஒருவழியுங் காணேன்.
சேற்றிற்செந் தாமரையாம் இரவில்அவள் தோற்றம்!
தீயில்எனைக் குளிர்செய்ய இன்னும்வர விலையே!