சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி! 21
பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி! 22
கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
கடுகளவு காணாதோ! 23
பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன ? 24
ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேனடி! 25
தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ ? 26
அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ! 27
உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ ? 28
காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன ? 29
சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ! 30
புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ? 31
வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ! 32
ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி
அருளடைய வேணுமென்று
தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி
தற்சொரூபங் காட்டி யென்னை 33
கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி
கொண்டான் குருவாகி
கள்களப் புலனறுக்க - ஆத்தாடி
காரணமாய் வந்தாண்டி. 34
ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி
ஐம்பத்தோர் அக்கரமும்
சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி
சுட்டான் துரிசறவே. 35
வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
மாண்டுவிழக் கண்டேண்டி
தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
தலைகெட்டு வெந்ததடி. 36
மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
மலர்பறித்துத் தூவாமல்
நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
நின்றநிலை காணேண்டி. 37
பாடிப் படித்து - ஆத்தாடி
பன்மலர்கள் சாத்தாமல்
ஓடித் திரியாமல் - ஆத்தாடி
உருக்கெட்டு விட்டேண்டி. 38
மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
பேசாப் பெருமையன் காண். 39
புத்தி கலங்கியடி - ஆத்தாடி
போந்தேன் பொரிவழியே
பதித்தறியாமல் - ஆத்தாடி
பாழியில் கவிழ்ந்தேனே. 40
தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி
தொல் பொருளை அறியார்கள் . . .
(முடிந்தது)