காதல் நினைவுகள்-13
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
13. தும்பியும் மலரும்
மகரந்தப் பொடியைத் தென்றல் - வாரிக்கொண் டோடி
அகம் நொந்த தும்பி எதிர் - அணியாகச் சிந்தும்!
வகை கண்ட தும்பி தன் - வயிடூரியக்கண்
மிகவே களிக்கும் அவள் - விஷயந் தெரிந்தே!
'பூப்பெய்தி விட்டாள்என் - பொற்றாமரைப் பெண்
மாப்பிள்ளை என்னை அங்கு - வர வேண்டுகின்றாள்
நீர்ப்பொய்கை செல்வேன்' என - நெஞ்சில் நினைக்கும்;
ஆர்க்கின்ற தீம்பண் ஒன்றை - அவளுக் கனுப்பும்!
அழகான பொய்கை மணி - அலைமீது கமலம்
பொழியாத தேனைத் தன் - புதுநாதன் உண்ண
வழிபார்த் திருந்தாள் உடல் - மயலாற் சிவந்தாள்!
தழையும்பண் ணொன்று வரத் - தன்மெய் சிலிர்த்தாள்.
கமழ் தாமரைப் பெண் இதழ்க் - கலைசோரக் கைகள்
அமையாது தாழ ஆ! - ஆ!! என்றிருந்தாள்.
இமைப்போதில் தும்பி காதல் - இசை பாடி வந்தான்
கமழ் தாமரைப் பெண் இதழ்க் - கையால் அணைத்தாள்.