காதல் நினைவுகள்-14
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
14. தமிழ் வாழ்வு
மாலையில் ஒருநாள் மாடியின் சன்னல்
திறக்கப் பட்டது; சேயிழை ஒருத்தி,
முத்தொளி நெய்து முடித்த ஆடையும்,
பத்தரை மாற்றுப் பசும்பொன் மேனியும்
உடையவ ளாக உலவு கின்றதை
'மருது' தனது மாடியி னின்று
கண்டான்; உவப்பிற் கலந்து நின்றான்!
* * * *
இரண்டு மாடியும் எட்டி இருந்ததால்
மருது, பெண்ணழகை அருகி லிருந்து
காணும் பேறு காணாது வருந்தினான்!
தூயாள் முகத்தொளி தோன்றும்; அம்முகச்
சாயலின்பம் தன்னைக் காண்கிலான்!
உதடு மாணிக்கம் உதிர்ப்பது தெரியும்;
எனினும் அவளின் இதழின் கடையில்
சிந்தும் அழகின் சிறுகோடு காணான்!
அவள்நடை, களிமயில் ஆடும் ஆட்டம்!
எடுத்தடி வைப்பாள்,எழிலிடை துவளும்;
துடித்துப் போவான் தூய மருது!
பொழுது மங்கிப் போவதை எண்ணி
அழுதான் மறையுமே அவள் எழில்என்று!
கண்கள் இருண்டன! கதிரவன் மறைந்தான்!
பெண்ணழகே எனப் பிதற்றிக் கிடந்தான்.
மறுநாட் காலையில் மருதும் சீனுவும்
பெரிதும் மகிழ்ச்சியடு பேசி யிருந்தனர்.
இடையில் சீனு இயம்பு கின்றான்:
'அவளோ அழகின் அரங்கு! நீயோ
இந்நாள் உற்ற இன்னொரு சேரன்;
ஒத்த வயதும், ஒத்த அன்பும்,
உள்ள இருவரின் உயர்ந்த காதலை
ஓராயிரம் ஆண்டுக் கொருமுறை யாக
இவ்வுலகு இன்றுகண்டு இன்பம் பெறட்டுமே!
இதற்குமுன் உனக்கென ஏற்பாடு செய்த
'கன்னல்' என்னும் கசக்கும் வேப்பிலையை
என்ன வந்தாலும் இகழ்ந்து தள்ளிவிடு!
மாடியில், நேற்று மாலைநீ கண்ட
ஆடுமயி லின்பெயர் அகல்யா என்பதாம்,
அவள் உனக்கேதான் இவண்பிறந் துள்ளாள்;
பச்சை மயிலுக்குப் பாரில்நீ பிறந்தாய்;
அவள்மேல் நீஉன் அன்பைச் சாய்த்ததைச்
சொன்னேன்; உன்னைத்தொட அவள் துடித்தாள்.
மங்கை அழகுக்கு மன்னன் ஒருவன்
அங்காந் திருப்பதை அவளும் அறிவாள்;
அவனைத் துரும்பென அகற்றி, நெஞ்சில்
உவகை பாய்ச்சிஉன் உருவை நட்டாள்!
அன்னை தந்தையர்க் கவளோ ஒருபெண்,
என்ன செய்வார்? ஏந்திழை சொற்படி
உன்னை மருகனாய் ஒப்பி விட்டனர்.
* * * *
முதலில் உன்றன் முழுச்சொத் தினையும்
இதுநாள் அவள்மேல் எழுதி வைத்துவிடு!
நகைகளைக் கொடுத்தால் நான்கொண்டு கொடுப்பேன்.
பிறகுதான் அவளிடம் பேச லாகும்நீ!
பார்ப்பதும் பிறகுதான்! பழகலும் பிறகுதான்!
குலதரு மத்தைக் குலைக்க லாகுமா?
என்று சீனு இயம்புதல் கேட்ட
இளையோன் 'நண்பனே இன்னொரு முறைஅக்
கிளியை மாடியில் விளையாட விடு;
மீண்டும் நான்காண விரும்பு கின்றேன்.'
என்று கெஞ்சினான்! ஏகினான் சீனு!
மாடியின் சன்னலை மங்கையின் கைகள்
ஓடித் திறந்தன. ஒளிவிழி இரண்டும்,
எதிர்த்த மாடியில் இருந்த மருதுமேல்
குதித்தன. மங்கைமேல் குளிர்ந்தன அவன் விழி.
அவன் விழி அவள்விழி அன்பிற் கலந்தன
அகல்யா சிரித்தாள், அவனும் சிரித்தான்
கைகள் காட்டிக் கருத்து ரைத்தார்கள்.
'என் சொத்துக்களை உன் பேருக்கே
எழுதி வைக்கவா?' என்றான் மருது!
'வேண்டாம்! உன்றன் விருப்பம் வேண்டும்'
என்றுகை காட்டினாள் எழிலுறும் அகல்யா.
'அழகிய நகையெல்லாம் அனுப்பவா?' என்றான்.
வேண்டாம் என்று மென்னகை அசைந்தாள்.
'இன்று மாலை இவ்வூர்ப் புறத்தில்
கொன்றையும் ஆலும் கொடும்பாழ் கிணறும்
கூடிய தனியிடம் நாடிவா' என்று
மங்கை உரைத்து மலருடல் மறைந்தாள்.
* * * *
'சொத்துவேண் டாம்உன் தூய்மை வேண்டும்.
நகைவேண் டாம்உன் நலமே வேண்டும் என்
றுரைத்தாள் அகல்யா; ஊர்ப்புறக் கொன்றை
மரத்தின் அருகில் வா என்று சொன்னாள்.'
என்று சீனுவிடம் இயம்பினான் மருது.
'நன்று நன்று நான் போகின்றேன்'
என்று சீனன் எரிச்சலாய்ச் சென்றான்.
மாலையில் கதிரவன் மறையும் போதில்
ஆலின் அடியில் அகல்யா அமர்ந்துதன்
இன்பன் வரவை எதிர்சென் றழைக்க
அன்பைத் தன்மொழி யதனில் குழைத்துப்
பண்ணொன்று யாழொடு பாடி யிருந்தாள்.
கொன்றை யடியில் குந்திக் கன்னலும்
வன்னெஞ் சுடையான் வரவு நோக்கிச்
சினத்தைத் தமிழொடு சேர்த்துப் பாடினாள்.
மருது விரைவில் வந்து கொண்டிருந்தான்.
ஒருகுரல்! தெளிந்த 'ஏசல்' ஒன்றும்,
பொருளில்லாத புதுக் குரல் ஒன்றும்,
செவியில் வீழ்ந்தன.திடுக்கிட் டவனாய்க்
கன்னல் வந்த காரணம் யாதென
உன்னினான்; சீனன் உளவென உணர்ந்தான்.
மேலும், 'என்வாழ்வை வீணாக் கியநீ
ஞாலமேல் வாழுதி நன்றே' என்ற
வசைமொழி கன்னல் வழங்குதல் கேட்டான்.
மருதுதான் அகல்யா வாழும் ஆலிடை
விரைவிற் சென்றான். மெல்லியின் பாட்டில்
தமிழிசை இருந்தது. தமிழ் மொழி இல்லை!
செழுமலர் இருந்தது திகழ்மண மில்லை!
வள்ள மிருந்தது வார்ந்த தேனில்லை!
தணலால் அவனுளம் தாக்கப் பட்டது!
கௌவிய தவனைக் கரிய இருட்டு!
வாழும் நெறியை மருது தேடினான்!
மேலும் 'என் வாழ்வை வீணாக்கிய நீ
ஞாலமேல் வாழுதி நன்றே' என்ற
கடுமொழி தன்னைக் கன்னல் கூறினாள்!
அகல்யா காதலால் ஆயிரம் சொன்னாள்!
சொன்னவை தெலுங்கர்க்குச் சுவைதரத் தக்கவை!
'பொருள் விளங்காமொழி புகலும் ஒருத்தி
இருளில் இட்ட இன்ப ஓவியம்.
அழகும் பண்பும் தழையக் கிடப்பினும்
பழகுதமிழ் அறியாப் பாவை தமிழருக்கு
உயிரில் லாத உடலே அன்றோ!
கடுமொழி யேனும் கன்னலின் தமிழ்த்தேன்
வடிவிலா வாழ்வுக் கடிப்படை யன்றோ?'
என்றான்; விலகினான்; கன்னலை நோக்கி!
அகல்யா மருதினை அகலாது தொடர்ந்தாள்.
மருது, கன்னலை மன்னிப்பு வேண்டினான்!
அத்தான் வருகஎன் றழைத்த கன்னலில்
மொய்த்தான்; மலரின் மூசு வண்டுபோல்!
'கன்னல்' 'மருது' தம் கண்ணும் நெஞ்சும்
இன்னல் உலகில் இல்லவே இல்லை;
பாழுங் கிணற்றில் அகல்யா
வீழ்ந்ததும் காணார்; மேவினர் இன்பமே!