தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

காதல் நினைவுகள்-9

9. காதல் இயற்கை
மறவன் சொல்லுகிறான்:

கண்ணிமையின் கடைக்கூட்டால் என்னைத் தட்டிக்
கனியிதழின் வண்ணத்தால் நெஞ்சை அள்ளி
மண்ணிடையே வாழ்வேனை உனது மையல்
மடுவினிலே தள்ளியபின் ஏடி மானே!
எண்ணிடையே ஏறாத பொய்மை வார்த்தை
ஏதேதோ சொல்லுகின்றாய் இதுவும் நன்றோ?
தண்ணிழலைத் தாவுகின்றேன்; சாதி பேதத்
தணலில்எனைத் தள்ளுகின்றாய் சகிப்ப துண்டோ?

குறவேந்தன் மகளடிநீ! அதனால் என்ன?
குறிஞ்சிநிலப் பெண்ணாதல் அப்பேர் இட்டார்!
மறவேந்தன் மகன்நான்தான்.வார்த்தை பேதம்
மாய்ப்பதுண்டோ நல்காதல் மகத்து வத்தை?
அறஞ்சொல்வார் இதைச்சொல்லி நமது வாழ்வை
அழிப்பர்எனில் அவ்வறத்தை அழிக்க வேண்டும்.
புறங்காண்போம் குள்ளர்சிலர் சொல்லும் பேச்சைப்
புனிதமடி ஒத்தஉளத் தெழுந்த காதல்.

* * * * *

குறத்தி சொல்லுகிறாள்:

கருமுகிலைப் பிளந்தெழுந்த மின்னும் வானும்
கைகலக்கும் போதுகல வாதே என்று
பெரும்புவியே நீசொன்னாய். ஐய கோஉன்
பேதமைக்கு நான் அஞ்சும் அச்சத் தாலே
அரும்புமிளம் பருவத்தான் ஆவி போன்றான்
அயர்கின்றான்;அயர்கின்றேன்.ஒன்று பட்டு
விரும்புகின்ற காதலினை மூடக் கொள்கை
வெட்டியதால் இருதுண்டாய் வீழ்ந்தோம் நாங்கள்!

உள்ளத்தில் உதித்தெழுந்த காதல் தீயில்
உடல்எரித்தல் யானறிவேன்; அறியார் மற்றோர்.
தள்ளத்தான் முடிவதுண்டோ அவன்மேல் ஆசை?
தணியாது போகுமெனில் உயிர்தான் உண்டோ?
அள்ளத்தான் போகின்றேன் அள்ளி அள்ளி
அருந்தத்தான் போகின்றேன் அவன்இன் பத்தை
துள்ளிப்பாய்ந் திடுநெஞ்சே! அந்தோ அந்தோ
துடுக்கடங்கி னாய்மூட வழக்கத் தாலே!

* * * * *

இயற்கை சொல்லுகிறது:

காதல்எனும் மாமலையில் ஏறி நின்றீர்
கடுமூட வழக்கத்துக் கஞ்ச லாமோ?
ஈதென்ன வேடிக்கை! சிரிப்பு வந்தென்
இதழ்கிழித்தல் கண்டீரோ காதல் மக்காள்!

குறத்தி சொல்லுகிறாள்:

மோதவரும் ஆணழகே வா வா வா வா!
முத்தம்வை இன்னொன்று; வைஇன் னொன்று!

மறவன் சொல்லுகிறான்:

மாதரசி கனியிதழோ தேனோ--சாதி
வழக்கழிக; இயற்கைத்தாய் வாழ்க நன்றே!