காதல் நினைவுகள்-12
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
12. வாளிக்குத் தப்பிய மான்
கணக்கப் பிள்ளையின்மேல்--அவளோ
கருத்தை வைத்திருந்தாள்.
மணக்கும் எண்ணத்தினை--அவளோ
மறைத்து வைத்திருந்தாள்.
பணக்கு வியல்தனைப்--பெரிதாய்ப்
பார்த்திடும் வையத்திலே,
துணைக்கு நல்லவனின்--பெயரைச்
சொல்வதும் இல்லைஅவள்.
அழகிய கணக்கன்--உளமோ
அவள் அழகினிலே
முழுகிய தன்றி-- மணக்கும்
முயற்சி செய்ததில்லை.
புழுதி பட்டிருக்கும்--சித்திரம்
போல இரண்டுளமும்
அழிவு கொள்ளாமல்--உயிரில்
ஆழ்ந்து கிடந்தனவாம்.
மணப்பிள்ளை தேடி--அலைந்தே
மங்கையின் பெற்றோர்கள்
பணப்பிள்ளை கிடைக்க--அவன்மேல்
பாய்ந்து மணம்பேசி
இணக்கம் செய்துவிட்டார்--மணமும்
இயற்றநாள் குறித்தார்.
மணத்தின் ஓலைப்படி--நகரின்
மக்களும் வந்திருந்தார்.
பார்ப்பனன் வந்துவிட்டான்--மணத்தின்
பந்தலில் குந்திவிட்டான்.
'கூப்பிடும் மாப்பிள்ளையைப்--பெண்ணினைக்
கூப்பிடும்' என்றுரைத்தான்.
ஆர்ப்பாட்ட நேரத்திலே--ஐயகோ
ஆகாய வீதியிலே
போய்ப்பாடும் மங்கையுள்ளம்--கணக்கன்
பொன்னான மேனியினை!
கொட்டு முழக்கறியான்--கணக்கன்
குந்தி இருந்தகடை
விட்டுப் பெயர்ந்தறியான்--தனது
வீணை யுளத்தினிலே
கட்டிச் சருக்கரையைத்--தனது
கண்ணில் இருப்பவளை
இட்டுமிழற்று கின்றான்--தனதோர்
ஏழ்மையைத் தூற்றிடுவான்.
பெண்ணை அழைத்தார்கள்--மணமாப்
பிள்ளையைக் கூப்பிட்டனர்.
கண்ணில் ஒருமாற்றம்--பிள்ளைக்குக்
கருத்தில் ஏமாற்றம்
'பண்ணுவதாய் உரைத்தீர்--நகைகள்
பத்தும் வரவேண்டும்;
எண்ணுவதாய் உரைத்தீர்--தொகையும்
எண்ணிவைக்க வேண்டும்.'
என்றனன் மாப்பிள்ளை தான்--பெண்ணினர்
'இன்னும் சிலநாளில்
ஒன்றும் குறையாமல்--அனைத்தும்
உன்னிடம் ஒப்படைப்போம்.
இன்று நடத்திடுவாய்--மணத்தை'
என்று பகர்ந்தார்கள்.
'இன்று வரவேண்டும்--அதிலும்
இப்பொழு' தென்றுரைத்தான்.
'நல்ல மணத்தைமுடி--தொகையும்
நாளைக்கு வந்துவிடும்.
முல்லைச் சிரிப்புடையாள்--அழகு
முத்தை மணந்து கொள்வாய்.
சொல்லை இகழாதே'--எனவே
சொல்லியும் பார்த்தார்கள்.
'இல்லை, முடியாது--வரட்டும்'
என்று மறுத்துவிட்டான்.
மங்கையைப் பெற்றவனும்--தனது
வாயையும் நீட்டிவிட்டான்.
அங்கந்த மாப்பிள்ளையும்--வாலினை
அவிழ்த்து விட்டுவிட்டான்.
பொங்கும் சினத்திலே--வந்தவர்
போக நினைக்கையிலே
தங்கம் நிகர்த்தவளின்--அருமைத்
தந்தை உரைத்திடுவான்.
'இந்த மணவரையில்--மகளுக்
கிந்த நொடியினிலே,
எந்த வகையிலும்நான்--மணத்தை
இயற்றி வைத்திடுவேன்.
வந்துவிட்டேன் நொடியில்'--எனவே
வாசலை விட்டகன்றே
அந்தக் கணக்கனிடம்--நெருங்கி
'அன்பு மகளினை நீ
வந்து மணம்புரிவாய்'--என்றனன்
மறுத்துரைப் பானோ?
தந்த நறுங்கனியைக்--கணக்கன்
தள்ளி விடுவானோ?
முந்தை நறுந்தமிழைத்--தமிழன்
மூச்சென்று கொள்ளானோ?
அந்த நொடிதனிலே--கணக்கன்
ஆடி நடக்கலுற்றான்.
'ஆசைக் கொருமகளே--எனதோர்
அன்பில் முளைத்தவளே!
காசைக் கருதிவந்தான்--அவனோ
கண்ணாலத்தை மறுத்தான்.
காசைக் கருதுவதோ--அந்தக்
கணக்கனைக் கண்டு
பேசி மணம்முடிக்க--நினைத்துன்
பெற்றவர் சென்றுவிட்டார்.
ஏழைஎன் றெண்ணாதே--கணக்கன்
ஏற்ற அழகுடையான்.
தாழ இருப்பதுவும்--பிறகு
தன்தலை நீட்டுமன்றோ!
எழையென் றெண்ணாதே'--எனவே
ஈன்றவள் சொன்னவுடன்
ஏழெட்டு வார்த்தைகள் ஏன்?--'மாப்பிள்ளை
யார்?' என்று கேட்டனள்பெண்.
'அந்தக் கணக்கப்பிள்ளை'--எனவே
அன்னை விளக்கிவிட்டாள்.
குந்தி இருந்தமயில்--செவிகள்
குளிரக் கேட்டவுடன்
தொந்தோம் எனஎழுந்தே--தனது
தோகை விரித்தாடி
வந்த மகிழ்ச்சியினைக்--குறிக்க
வாயும் வராதிருந்தாள்.
அந்த மணவறையில்--உரைத்த
அந்த நொடியினிலே
அந்தக் கணக்கனுக்கும்--அவனின்
ஆசைமயில் தனக்கும்
கொந்தளிக்கும் மகிழ்ச்சி--நடுவில்
கொட்டு முழக்கிடையில்
வந்தவர் வாழ்த்துரையின்--நடுவில்
மணம் முடித்தார்கள்.
'சிங்கக் குழந்தைகளை--இனிய
செந்தமிழ்த் தொண்டர்களைப்
பொங்கும் மகிழ்ச்சியிலே--அங்கமே
பூரிக்க ஈன்றிடுக.
திங்களும் செங்கதிரும்--எனவே
செழிக்க நல்லாயுள்'
இங்கெழும் என்வாழ்த்து--மொழிகள்
எய்துக அவ்விருவர்!